மலைப் பாதைகளில் ஏற்படும் விபத்துகளை குறைக்க தமிழகத்தில் முதன்முறையாக உதகை அருகே ரப்பர் உருளைகளால் ஆன தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன .நீலகிரி மாவட்டத்திலுள்ள கல்லட்டி மலைப்பாதையில் 36 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன.
மிகவும் ஆபத்தான இந்த மலைப்பாதையில் நடந்த அடுத்தடுத்த விபத்துக்களால் பலர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த ஆண்டு கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஐந்து இளைஞர்கள் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களை 52 மணிநேரத்திற்கு பிறகு தான் மீட்க முடிந்தது.
இதையடுத்து கல்லட்டி மலைப்பாதையில் வாகன விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரப்பர் உருளைகளால் ஆன தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளில் மட்டுமே உள்ள இந்த பாதுகாப்பு முறை தற்போது தமிழகத்தில் முதன் முறையாக கல்லட்டி மலைப்பாதையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கட்டுப்பாட்டை இழக்கும் வாகனங்கள் ரப்பர் தடுப்பில் மோதும்போது பயணம் செய்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும் என நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.