மலைப்பாம்பு வளர்ப்பதாக புகார்..? நடிகர் அஜீத் வீட்டில் அதிரடி சோதனையா.? வனத்துறை மறுப்பு!!
நடிகர் அஜீத் குமார் வீட்டில் மலைப்பாம்பு வளர்க்கப்படுவதாகவும், இதனால் வனத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகி பரபரப்பானது. ஆனால் வனத்துறையினரோ அஜீத் வீட்டில் சோதனை நடத்தப்படவில்லை என்று மறுத்துள்ளனர்.
தமிழ்த் திரையுலகில் கொடி கட்டிப் பறக்கும் பிரபல நடிகர்களில் ஒருவர்தான் அஜீத் குமார். ‘தல’ என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் அஜீத்குமார், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் வசித்து வருகிறார்.
அஜீத்தின் மேனேஜராக பணிபுரிந்து வரும் சுரேஷ் சந்திரா என்பவர், அஜீத்தின் வீட்டில் மலைப் பாம்பு ஒன்றை வளர்த்து வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று அஜீத் வீட்டிற்கு வந்த வனத்துறையினர் 3 அடி நீள மலைப்பாம்பு குட்டி ஒன்றை பறிமுதல் செய்ததுடன், சுரேஷ் சந்திரா மற்றும் அவருடைய உதவியாளர் நாசர் ஆகிய இருவர் மீது வன விலங்குகள் தடுப்புச் சட்டத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இன்றும் வனத்துறை அதிகாரிகள் அஜீத்தின் வீட்டில் திடீர் சோதனை நடத்தி,வீட்டில் இருந்தவர்களிடமும் துருவித் துருவி விசாரித்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின. அந்த வீட்டில் நேற்று குட்டி மலைப்பாம்பை கைப்பற்றிய நிலையில் மேலும் ஒரு பெரிய மலைப்பாம்பு ஒன்றும் வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்தே வனத் துறையினர் சோதனை நடத்தியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், சென்னை சரக வனச்சரகர் மோகன், அஜீத் வீட்டில் சோதனை எதுவும் நடைபெறவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார். அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா என்பவர், 3 அடி நீள மலைப்பாம்பை வளர்த்து வருவதாக சமூக வலைதளங்களில் தான் செய்திகள் உலா வருவதாகவும், வனத்துறை தரப்பில், எந்த சோதனையோ, விசாரணையோ நடத்தப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




