உள்ளாட்சித் தேர்தலைக் கண்டு திமுகவும் பயம் ஏற்பட்டுள்ளது என்றும், தெம்பு, தில்லு, திராணி இருந்தால் மக்களை சந்திக்க வேண்டியது தானே? என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, சேலத்தில் அதிமுக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை சட்டத்தால் யாருக்கும் பாதிப்பு வராது. இலங்கையில் போர் நடந்த போது, தமிழர்களுக்காக குரல் கொடுக்காத கட்சிதான் திமுக. இப்போது, குடியுரிமைச் சட்டத்தால் இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்பு எனக் கூறி ஆதரவு தெரிவிப்பது போல் நாடகமாடுகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளதைப் பார்த்தே, திமுக தேர்தலைச் சந்திக்க பயப்படுகிறது. இதனாலேயே மக்களைக் குழப்பி தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடப் பார்த்தனர். உள்ளாட்சித் தேர்தலை பார்த்து திமுக பயப்படுவது ஏன்? திமுகவுக்கு தெம்பு , திராணி, தில் இருந்தால் தேர்தலைச் சந்திக்க வேண்டியதுதானே? என்று முதல்வர் எடப்பாடி சாடினார்.
நாடாளு மன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக, கொறடா உத்தரவுப்படி தான் அதிமுக எம்.பி.க்கள் வாக்களித்தனர். கொறடா உத்தரவை மீறினால் தான் பிரச்னை. ஆனால் தமிழக அரசின் துணைச் செயலாளர் தொலைபேசியில் கூறியதால் அதிமுக எம்.பி.க்கள் ஓட்டளித்ததாக எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் கூறியது குறித்து அவரிடம் நேரில் கேட்டால் தான் தெரியும். இந்தப் பிரச்னை அதிமுக உள் கட்சி விவகாரம். இதில் திமுக தலையிடுவது ஏன்? என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.