குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 23-ந் தேதி அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் பேரணி நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில் அதிமுக இந்தச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக உள்ள நிலையில், திமுக உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. திமுக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.
இந்நிலையில், இந்தச் சட்டத்திற்கு எதிராக தமிழகத்தில் அடுத்தக் கட்ட போராட்டம் நடத்துவது பற்றி ஆலோசிக்க, அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.அதன் படி சென்னை அண்ணா அறிவாலத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து நடத்துவது பற்றி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் வரும் 23-ந் தேதி சென்னையில் பிரமாண்டமான முறையில் குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு பேரணி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கூட்ட முடிவில் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், குடியுரிமை திருத்தச் சட்டம் இஸ்லாமியர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் எதிரானது. இச்சட்டத்திற்கு ஆதரவளித்ததின் மூலம், அதிமுக பெரும் துரோகம் செய்துள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் சொல்வதை அப்படியே ஏற்கும் முதல்வராக எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக வரும் 23-ந் தேதி காலை 10 மணிக்கு சென்னையில் பேரணி நடைபெறும்.
கட்சி சார்பற்ற முறையில் முறையில் நடத்தப்படும் இந்தப் பேரணியில் அனைத்து தரப்பினரும் பங்கேற்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசனும் தொலைபேசியில் பேசி ஆதரவு தெரிவித்துள்ளார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தற்போது திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமே பங்கேற்ற கூட்டம் நடத்தப்பட்டது என்றும், அடுத்த கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு மீண்டும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.