இளம்பெண் கடத்தலை தடுத்த மூதாட்டி மீது அமிலம் வீசி தாக்கும் காட்சி…!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இளம்பெண்ணை கடத்தும் முயற்சியை தடுக்க வந்த மூதாட்டியை அமிலம் வீசி கொலை செய்த நபர் மூதாட்டியை மிரட்டும் காட்சிகளும் பொதுமக்கள் அவரை தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

 

ராசிபுரத்தையடுத்த குருசாமி பாளையத்தில் கணவரை இழந்த விஜயா என்ற பெண்மணி சாமுவேல் என்ற ரவுடியுடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் விஜயாவின் மகளான கல்லூரி மாணவியை திருமணம் செய்துகொள்ள சாமுவேல் விரும்பியதாக தெரிகிறது.

 

இதற்கு வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் கடந்த 13-ஆம் தேதி அமிலம் மற்றும் கத்தியுடன் விஜயா வீட்டிற்கு வந்த சாமுவேல் அங்கிருந்த விஜயாவின் மாமியார் தனத்தை கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். பேத்தியை தன்னுடன் அனுப்புமாறு மூதாட்டியை கத்திமுனையில் அச்சுறுத்தி உள்ளார்.

 

மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வரவே அவர்களிடம் அமிலத்தை காட்டி மிரட்டிய சாமுவேல் பொதுமக்கள் மீது அமிலம் வீசியுள்ளார். இதில் 10க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதற்குள் தகவலறிந்து வந்த காவல்துறையினரும், எஞ்சிய மக்களும் மூதாட்டியை காப்பாற்ற முயற்சித்தனர்.

 

அப்போது மூதாட்டியின் மீது அமிலத்தை ஊற்றி அவரை சாமுவேல் கொலை செய்து விட்டு தப்பி ஓட முயன்றார். அவரை பொதுமக்கள் சூழ்ந்து தடிகளாலும், கற்களாலும் தாக்கினர். மக்கள் தாக்கியதில் சாமுவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது தாக்குதல் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.


Leave a Reply