--- --:--:-- --

20,000க்கு விற்கப்பட்ட இரு சிறுமிகள்

7

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே இரு சிறுமிகள் இருபதாயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாசத்தை கொட்டி வளர்க்கவேண்டிய பிள்ளைகள் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட அவலம் குடவாசல் பகுதியில் அரங்கேறியுள்ளது.

 

திருவாரூர் மாவட்டம் குடவாசலை சேர்ந்த காளியப்பன் ஒரு கூலித்தொழிலாளி. மூன்று மகள்களையும் மனநலம் பாதிக்கப்பட்ட மனைவியையும் பராமரித்து வந்த இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. குடும்ப வருமானத்தின் ஆதாரமாக இருந்த காளியப்பன் நோய்வாய்ப்பட்ட நிலையில் செய்வதறியாமல் திணறி இருக்கிறது அவரது குடும்பம்.

 

இந்நிலையில் காளியப்பனின் 13 மற்றும் 12 வயதுடைய மகள்கள் இருவர் திடீரென காணாமல் போய்விட்டனர். அதுகுறித்து உறவினர்கள் எதுவும் கண்டுகொள்ளாத நிலையில் குடவாசல் கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பனுக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

 

அவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்ட போது சிறுமிகள் இருவரும் பணத்திற்காக விற்பனை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. காளியப்பனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் பொருளாதார உதவியின்றி அவரது குடும்பம் தவித்து வந்திருக்கிறது. இதை அறிந்த சகுந்தலா, கனகம் என்ற இரண்டு பேர் காளியப்பனின் தாய் விஜயலட்சுமியை அணுகியுள்ளனர்.

 

சிறுமிகள் இருவரையும் வேலைக்கு சேர்த்துவிட்டால் 20 ஆயிரம் ரூபாய் தருவதாக விஜயலட்சுமியிடம் ஆசை வார்த்தை கூறி உள்ளனர். அதனை ஏற்றுக்கொண்ட விஜயலட்சுமி 20 ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு காளியப்பன் மகள்கள் இரண்டு பேரையும் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

 

அது பற்றிய விசாரணையில் சிறுமிகள் இருவரும் ஈரோடு மாவட்டத்திலுள்ள நூற்பாலையில் கூலி வேலை செய்து வருவது தெரியவந்துள்ளது.

 

இதையடுத்து இடைத்தரகர்களாக செயல்பட்ட சகுந்தலா,கனகம் ஆகியோரையும் சிறுமிகள் பாட்டி விஜயலட்சுமியும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து ஈரோடு விரைந்து உள்ள காவல்துறையினர் சிறுமிகளை பத்திரமாக மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon