--- --:--:-- --

24 மணி நேரத்தில் அழகிய வீடு ரெடி!

6

மெக்சிகோவில் வசிக்கும் ஏழை மக்களுக்கு 3டி தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடுகளை கட்டிக் கொடுக்க முன்வந்துள்ளது லாப நோக்கமற்ற கட்டுமான நிறுவனம் ஒன்று. சாதாரணமாக ஒரு வீட்டை கட்டவேண்டும் என்றால் குறைந்த பட்சம் ஆறு மாத காலம் தேவைப்படும்.

 

ஆனால் மெக்சிகோவில் ஒரு வீட்டை 24 மணி நேரத்தில் கட்டி முடித்துள்ளனர் என்றால் நம்பமுடிகிறதா? 3டி பிரிண்டர் மூலம் அச்சிடப்பட்ட உலகின் முதல் வீட்டை பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது ஐகான் எனும் கட்டுமான நிறுவனம். மெக்சிகோ உள்ள ஏழை மக்கள் பலர் கையில் கிடைத்த மரத்துண்டுகள், இரும்பு பலகைகளால் கட்டப்பட்ட வீடுகளில் வசித்து வருகின்றனர்.

 

இவர்களின் வாழ்க்கையை மாற்றியமைக்க நியூ ஸ்டோரி எனும் இலாப நோக்கமற்ற நிறுவனம் முடிவு செய்தது. இதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஐகான் எனும் கட்டுமான நிறுவனத்துடன் கை கோர்த்து புதிய வீடுகளை கட்டிக் கொடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

 

இதில் ஒரு பகுதியாக முப்பரிமாணம் எனும் 3d தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 24 மணி நேரத்தில் இரண்டு வீடுகளை கட்டி சாதித்துள்ளது ஐகான் நிறுவனம். 500 சதுர அடியில் ஒரு ஹால், இரண்டு பெட்ரூம், ஒரு சமையலறை மற்றும் அட்டாச் பாத்ரூம் உடன் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

 

ஐகான் கட்டுமான நிறுவனத்தின் ராட்சச 3d பிரின்டிங் கருவி 9 அடி உயரம் 28 அடி அகலம் கொண்ட 2,000 சதுர அடி வீடு களை கட்டும் திறன் கொண்டது எனக் கூறப்படுகிறது. கிரேன் மூலம் வீடுகட்டும் இடத்திற்கு கொண்டு வரப்படும் 3டி பிரிண்டர் கருவியில் அச்சில் மை ஊற்றுவது போன்று கான்கிரீட் கலவை நிரப்பப்படுகிறது.

 

பின்னர் இந்த கலவைகள் அடுக்கடுக்காக வார்க்கப்பட்டு வீடுகள் தயாராகின்றன. முதலில் சுவர்கள் எழுப்பப்பட்ட பின் கட்டுமான கலைஞர்களைக் கொண்டு ஜன்னல் மற்றும் கதவுகளை பொருத்தப்பட்டு இந்த வீடுகள் முழு வடிவம் பெற்றுள்ளது.

 

இதேபோன்று அடுத்தகட்டமாக 48 வீடுகளை இதே பகுதியில் வசிக்கும் ஏழை மக்களுக்கு அடுத்த ஆண்டிற்குள் கட்டி தரப்படும் என்றும் நியூ ஸ்டோரி நிறுவனம் கூறியுள்ளது. 3டி தொழில்நுட்பம் மூலம் வீடுகளை கட்டுவதன் மூலம் ஒட்டுமொத்த கட்டுமான செலவில் சுமார் 60 சதவீதம் செலவுகளை குறைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon