குடியுரிமை திருத்த சட்ட நகலை கிழித்து போராட்டம்..! சென்னையில் உதயநிதி ஸ்டாலின் கைது!!
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்ட நகலை கிழித்து, சாலை மறியல் போராட்டம் நடத்திய திமுக இளைஞரணித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதா, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதியும் ஒப்புதல் கொடுக்க சட்டமாகியுள்ளது.
இந்த சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பி, போராட்டங்களும் வெடித்துள்ளன. திமுக இளைஞரணி சார்பில், தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களும் இன்று நடத்தப்பட்டன.
சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். இதற்காக ஏராளமான தொண்டர்களுடன் பேரணியாக வந்த உதயநிதி ஸ்டாலின், ஆர்ப்பாட்ட மேடையில் ஏறி, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினார். அத்துடன் குடியுரிமை சட்ட நகலை கிழித்தெறிந்ததுடன் திடீரென சாலையில் அமர்ந்து மறியலிலும் உதயநிதி ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உதயநிதியையும், திமுக தொண்டர்களையும் போலீசார் கைது செய்ய முயன்ற போது பதற்றம் ஏற்பட்டு தள்ளுமுள்ளானதால் அந்தப் பகுதியில் பரபரப்பானது. பின்னர் உதயநிதி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




