ஹைதராபாத் என்கவுண்டர் விவகாரம் : நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

ஐதராபாத்தில் கால்நடை பெண் மருத்துவர் பாலியல் கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதான குற்றவாளிகள் 4 பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நீதி விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

தெலங்கானா தலை நகர் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், 26 வயதான கால்நடை பெண் மருத்துவர், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.இந்த வழக்கில் விரைந்து துப்பு துலக்கிய போலீசார், இரண்டே நாட்களில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். லாரி டிரைவர், கிளீனர் பணி செய்த இந்த 4 பேரும் அடுத்த 2 நாட்களில் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

 

கொலையுண்ட பெண் மருத்துவரின் சடலம் கிடந்த இடத்திற்கு, விசாரணைக்காக குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போது இந்த என்கவுன்டர் நடந்தது. போலீசாரை தாக்கிவிட்டு, துப்பாக்கியையும் பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றதால் 4 பேரையும் சுட்டுக் கொல்ல வேண்டி தாயிற்று என்று தெலங்கானா தரப்பில் கூறப்பட்டது.

 

குற்றவாளிகள் 4 பேரையும் சுட்டுக்கொன்றதற்கு நாடு முழுவதும் பலரும் வரவேற்பு தெரிவித்தனர். அதே வேளையில், சட்டத்தின் பின் நிறுத்தி தண்டிக்க வேண்டுமே தவிர, என்கவுன்டரில் கொல்வது தவறு என்ற ரீதியிலும் எதிர் விமர்சனங்கள் எழுந்தன. தேசிய உரிமைகள் ஆணையம் உள்ளிட்ட மனித உரிமைகள் அமைப்பும் இந்த என்கவுண்டர் குறித்து கேள்வி எழுப்பின.

 

இந்த என்கவுண்டருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு, தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. ஹைதராபாத் என்கவுண்டரில் உண்மை என்னவென்பது மக்களுக்கு தெரிய வேண்டும். எனவே நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சிர்புகர் தலைமையிலான குழுவை அமைத்து உத்தரவிட்டார். 4 மாதங்களுக்குள் விசாரணை முடித்து அறிக்கையை தாக்கல் செய்யவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply