“காரமும் தூக்கல், இதயத்துக்கும் நல்லதாம்” எகிப்து வெங்காயத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜு வக்காலத்து!!

எகிப்து வெங்காயத்தில் ருகியும் இல்லை… காரமும் இல்லை.. என முகம் சுளித்து மக்கள் ஆர்வம் காட்ட மறுத்த நிலையில், அந்த வெங்காயத்துக்கு வக்காலத்து வாங்குவது போல், காரமும் ஜாஸ்தி… இருதயத்துக்கும் நல்லது.. என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ள கருத்து கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

 

வெங்காயம் விலை கிடு கிடுவென ஜெட் வேகத்தில் விலை உயர்ந்ததால் நாடு முழுவதும் பொதுமக்கள் அல்லாடி திண்டாடி வருகின்றனர். 200 ரூபாயை தாண்டி விலை விற்றதால், விலையைக் கேட்டவுடனே மக்கள் கண்ணீர் விட்டனர்.

 

இதனால் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு எகிப்து, நைஜீரியா, துருக்கி போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்தது.முதல் கட்டமாக துருக்கியிலிருந்து இறக்குமதியான வெங்காயம், தமிழகத்தின் பல நகரங்களுக்கு சில நாட்களுக்கு முன் வந்து சேர்ந்தது. விலையும் ரூ 70 முதல் 100 வரை விற்பனையானதால் முதல் நாளில் இந்த வெங்காயம் விற்பனை சக்கைப்போடு போட்டது. ஆனால் சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்பது போல், எகிப்து வெங்காயத்தில் ருசியும் இல்லை, காரமும் இல்லை மக்கள் கண்டு விட்டனர். இதனால் இந்த வெங்காயத்தை வாங்க மக்கள் ஆர்வம் காட்டாததால், வியாபாரிகள் பலர் ஐயோ நஷ்டம் என புலம்பித் தீர்த்தனர்.

 

மேலும் உள்நாட்டு வெங்காயமும் சந்தைக்கு வர ஆரம்பித்துள்ளதால் விலை குறைய ஆரம்பித்துள்ளது. கடலூர் உள்ளிட்ட சில நகரங்களில் கிலோ ரூ.10 வரை உள்நாட்டு வெங்காயம் விற்பனையானது. இதனாலும் எகிப்து வெங்காயத்தின் மவுசும் குறைய ஆரம்பித்துள்ளது.இந்நிலையில் கூட்டுறவு கடைகள் மூலம் வெங்காயம் விற்க முடிவெடுத்துள்ள தமிழக அரசு 25 ஆயிரம் டன் எகிப்து வெங்காயம் இறக்குமதி செய்யவும் ஏற்கனவே ஆர்டர் கொடுத்துள்ளது. இப்போது எகிப்து வெங்காயத்தை தமிழக மக்கள் விரும்பாத நிலையில், தமிழக அரசு இறக்குமதி செய்து விற்கப் போகும் அந்த வெங்காயம் எடுபடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இந்நிலையில் தான் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, எகிப்து வெங்காயத்துக்கு விளம்பரத் தூதர் போல் ஆஹா.. ஓகோ.. வக்காலத்து வாங்கி புகழ்ந்து தள்ளியுள்ளது இப்போது கிண்டலுக்கு ஆளாகியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு கூறியதாவது:
எகிப்து வெங்காயத்தில் சல்பர் அதிகமாக இருப்பதால் காரம் தூக்கலாக இருக்கும். இதயத்திற்கும் நல்லது .
எகிப்து வெங்காயத்தின் தன்மையை முதல்வரே அறுத்து சாப்பிட்டு பரிசோதனை செய்துள்ளார் என்று ஒரே போடாக ஆஹா.. ஓஹோ என செல்லூர் புகழ்ந்துள்ளார்.

 

ஏற்கனவே வைகை அணையில் தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மா கோல் சீட் போட்டு மூடிய விவகாரத்தில், அமைச்சர் செல்லூர் ராஜுக்கு தெர்மா கோல் விஞ்ஞானி என்ற பட்டம் சூட்டி 2 வருடங்களாக கிண்டலடித்து வருகின்றனர். அத்துடன் சமூக வலைதளங்களிலும் செல்லூர் ராஜு குறித்த மீம்ஸ்களும் பஞ்சமில்லாமல் இன்னும் உலா வருகின்றன. இந்நிலையில் எகிப்து வெங்காயம் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு இப்போது கூறியுள்ள கருத்தும் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.


Leave a Reply