முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் தலைவி படத்துக்கும், குயின் என்ற இணையதள தொடருக்கும் தடையில்லை என ஜெ. தீபா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தயாராகும் தலைவி படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ராவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். அதே போல் ஜெயலலிதா வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றனர்.
இதற்கிடையே ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ. தீபா, தனது அனுமதியில்லாமல் தலைவி படத்தையும், குயின் தொடரையும் தயாரிக்கவும், விளம்பரப்படுத்தவும், திரையிடவும் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கில், இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் தரப்பில், இந்த திரைப்படமும், இணைய தொடரும் கற்பனை அடிப்படையிலேயே எடுக்கப்படுவதாகவும், இதில் ஜெ. தீபாவின் கதாபாத்திரம் எந்த இடத்திலும் இடம் பெறவில்லை எனவும் கூறப்பட்டது இதைத் தொடர்ந்து தலைவி படத்துக்கும், குயின் தொடருக்கும் தடையில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர் நீதிமன்றம் .