தமிழகத்தில் 2 நாட்களுக்கு இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வடகிழக்கு பருவ காற்றையொட்டி கடந்த வாரம் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது.
கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, நெல்லை, ராமநாதபுரம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. அதனைத் தொடர்ந்து சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் கடந்த சில நாட்களாக வெயில் அடித்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி நிலவுவதால் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும், ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் தமிழகத்தின் பல இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.