திருப்பூர் காலேஜ் ரோட்டில், ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் இருசக்கர வாகனங்களின் பிளக் வயர்கள் மட்டும் மாயமாகி விடுகிறது. இதனால் பக்தர்கள் அல்லல்படுகின்றனர். இதன் பின்னணியில் போலீசாரே இருப்பதாக ‘பகீர்’ தகவல்கள் வெளியாகியுள்ளது.
திருப்பூர் காலேஜ் ரோட்டில் அமைந்துள்ளது ஐயப்பன் கோவில்.60-ம் ஆண்டு வைரவிழா கொண்டாடப்பட்ட பிரசித்தி பெற்ற கோவில் இது. தற்போது சபரிமலை சீசன் என்பதால், இங்கு ஐயப்பனுக்கு தினசரி அலங்காரம், சிறப்பு பூஜைகளும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. மாலை அணிந்து விரதம் இருக்கும் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி பக்தர்கள் ஏராளமானோர் இங்கு தினமும் தரிசனத்திற்காக வருகின்றனர். இதனால் காலை, மாலை வேளையில் கோவிலில் கூட்ட நெரிசல் காணப்படுவதும் வாடிக்கையாகி விட்டது.
பரபரப்பான காலேஜ் ரோட்டில் கோவில் அமைந்துள்ளதால், இரு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் தங்கள் வாகனத்தை இடம் நிறுத்த இடம் இல்லாமல் அல்லாடுகின்றனர். காலை வேளையில் திருப்பூர் வடக்கு போக்குவரத்து போலீசார் வாகனங்களை நிறுத்த ‘பாரி கார்டு’ தடுப்புகள் அமைத்து இடம் ஒதுக்கி, போக்குவரத்தை சீர் செய்கின்றனர்.
ஆனால், மாலையில் இங்கு போலீசார் நிற்பதில்லை. பதிலாக சேவைப் பணியில் ஈடுபடும் வாார்டன்,ஹோம் கார்டு மற்றும் போலீசாருக்கு உதவி செய்யும் சில ஆட்கள் மட்டுமே பெயரளவுக்கு நிற்கின்றனர். மாலை வேளையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த உரிய இடம் தெரியாமல், கிடைத்த இடத்தில் நிறுத்தி விட்டுச் செல்கின்றனர்.
பின்னர் சாமி கும்பிட்டு விட்டு திரும்பி வரும் பக்தர்கள் பலரின் பாடுதான் படு திண்டாட்டமாகி விடுகிறது. சாவியை போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆவதில்லை. பாவம் செல்ப் ஸ்டார்ட் பட்டனை பலமுறை அழுத்தியும், கிக்கரையும் மிதி மிதியென மிதித்துப் பார்த்தாலும் ஸ்டார்ட் ஆவதில்லை. இதனால் இன்ஜினில் ஏதோ கோளாறு போல என குழப்பத்துடன் வண்டிகளை தள்ளிச் சென்று ரொம்ப தூரத்தில் உள்ள மெக்கானிக்குகளை நாடுகின்றனர்.
அப்போதுதான் அவர்களுக்கு ‘ஷாக்’ அடிக்கிறது. இன்ஜினினுக்கு மின்சாரம் செல்லும் ‘பிளக்’ வயரோடு மாயமாகியிருப்பது தெரிய வருகிறது. இது போன்று ஐயப்பன் கோவில் முன் நிறுத்தப்படும் பல பைக்குகளில் பிளக் வயர் மாயமாவது தினசரி வாடிக்கையாகி வருகிறது. பிளக் மாயமானது தெரியாமல், வண்டியை மிதி மிதியென மிதித்து பக்தர்களும் அலுத்துப் போய் வேதனையில் தத்தளிப்பதும், பின்னர் புலம்பிக் கொண்டே தள்ளிச் செல்வதும் வழக்கமாகி விட்டது.
கடைசியில், இந்த பிளக் வயர்களை ‘அபேஸ்’ செய்வது யார்? என்று பார்த்தால், அங்கு காவலுக்கு இருப்பவர்களின் போலீசாரின் கையாட்களின் அடாவடி தான் என்று கூறப்படுகிறது. சாலையில் வாகனங்களை கன்னாபின்னாவென்று நிறுத்திச் செல்வதால், அவர்களுக்கு தண்டனை கொடுப்பதாக நினைத்து இப்படி பிளக் வயர்களை அபேஸ் செய்கிறார்களாம்.
முன்னரெல்லாம், வாகனங்களின் டயர்களில் காற்றை வெளியேற்றி விட்டு உருட்டிச் செல்ல வைப்பதை வாடிக்கையாக செய்து வந்த போலீசார், இப்போது தண்டனை கொடுக்கும் பாணியை ஹை டெக்காக மாற்றி பிளக்கை அபேஸ் செய்யும் நூதன பாணிக்கு மாறிவிட்டார்கள் போலும். ஆனால் வண்டிக்கு என்ன ஆனது? எனத் தெரியாமல், இரவு நேரத்தில் பக்தர்கள் படும் அல்லல் இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறதோ?
நேற்றிரவு மட்டும் 5-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் பிளக்குகள் மாயமாகி பக்தர்கள் அவதிப்பட்டனர். இதுகுறித்து வேதனையுடன் தெரிவித்த பக்தர் ஒருவர், மன நிம்மதிக்காக சாமி கும்பிட வந்தால், இப்படி வண்டிக்கு என்ன ஆனது? எனத் தெரியாமல் உருட்டிச் செல்வது நிம்மதியையே குலைத்து விட்டது. மேலும் செல்ப் ஸ்டார்ட்டரை தொடர்ந்து அழுத்தியதால், பேட்டரியும் வீக் ஆகி விட்டது. கடைசியில் தான் இங்கு பிளக் அபேஸ் செய்கிறார்கள் என்று மற்றவர்கள் கூற. என் வண்டியிலும் பிளக் காணவில்லை. இரவு நேரத்தில் புதிய பிளக் வயர் வாங்க எங்கே போவது? எனத் தெரியாமல் முழிக்கிறேன் என அந்த பக்தர் புலம்பித் தீர்த்து விட்டார்.
கார்த்திகை, மார்கழி மாத சீசன் நேரத்தில், கோவிலுக்கு வரும்பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில், அங்கு பாதுகாப்புக்கும், போக்குவரத்தை சீர் செய்யவும் கூடுதல் போலீசாரை நிறுத்துவது தான் நியாயம். அதை விடுத்து, போலீசாரே, தங்களின் கையாட்களான சிலரை வைத்து, பிளக் வயர்களை பிடுங்கச் செய்து பக்தர்களை அல்லாட வைப்பது என்ன நியாயமோ..? இந்த அடாவடிகளுக்கு முடிவு கட்ட வேண்டியது காவல்துறை உயர் அதிகாரிகள் தான். அத்துடன் திருப்பூர் ஐயப்பன் கோவில் நிர்வாகமும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பில் சிறிது அக்கறை காட்டி கண்காணிக்க வேண்டியதும் அவசியம்.