நடிகர் விஜயை பார்க்க நீண்டநேரம் காத்திருந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் அவர் வராததால் ஏமாற்றம் அடைந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயர் வைக்கப்படாத தனது 64ஆவது படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூவிருந்தவல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளியில் மூன்று நாட்களாக நடைபெற்றது. படப்பிடிப்பின்போது விஜய்யை பார்க்க அவரது ரசிகர்கள் ஏராளமானோர் பள்ளி முன்பு கூடியதால் பார்வையற்ற மாணவர்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்ததாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யை அப்பள்ளியில் படிக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவர்கள் சந்திக்க விரும்புவதாக பள்ளி நிர்வாகம் கோரிக்கை வைத்தது. நடிகர் விஜய்யின் உதவியாளர் விஜய்யை பார்க்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.
இதனால் பார்வையற்ற மாணவர்களை ஒருங்கிணைத்து காத்துக் கொண்டிருந்ததாகவும் ஆனால் நீண்ட நேரமாகியும் சந்திக்காமலேயே விஜய் சென்றுவிட்டதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்ததாகவும் பள்ளி ஆசிரியர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார்கள்.