தெலுங்கானாவில் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட நான்கு பேர் என்கவுண்டர் செய்யப்பட்ட நாள் கொல்லப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைத்த நாள் என்று நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை தண்டிக்க கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.
தெலுங்கானா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தின் சூடு அடங்குவதற்குள் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் மற்றொரு இளம்பெண் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தெலுங்கானாவில் பாலியல் கொடுமையில் ஈடுபட்ட நான்கு பேர் அதிரடியாக சுட்டுக் கொல்லப்பட்டதை வரவேற்ற நயன்தாரா 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் பெண்களுக்கு நியாயம் கிடைத்த நாளாக குறித்து வைத்துக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை மனிதநேயமிக்க நடவடிக்கை என்று சொல்வேன் என்று குறிப்பிட்டுள்ள அவர் பெண்களுக்கு எதிரான காட்டுமிராண்டிகளுக்கு என்கவுண்டர் சற்றேனும் பயன்பெறும் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக் கொடுக்க வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பெண்களை மதிப்பவனே பாதுகாப்பவனே நாயகன் என மனதில் பதிய வைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே உன்னாவ் படுகொலை சம்பவத்தை கண்டித்து உள்ள பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண் நாட்டில் அக்கறையின்மையுடன் நடத்தப்படுவதாகவும் குற்றவாளிகள் சுதந்திரமாக சுற்றித் திரிவதாகவும் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் பெண்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவது பெரும் சோதனை ஆகி விட்டது எனவும் கூறியுள்ளார்.தாம் ஒரு மகனுக்கு தாயாக இருக்கும் நிலையில் மகள்களை பெற்றவர்களின் அச்சத்தை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.
பெண் குழந்தைகளை பாதுகாப்போம் என்ற பேட்டி பச்சோ திட்டம் வெறும் தேர்தல் முழக்கம் ஆகிவிடக் கூடாது என கூறியுள்ள ஷில்பா ஷெட்டி குற்றவாளிகளை தண்டிக்கும் கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.