உள்ளாட்சித் தேர்தல்: புதிய அட்டவணை எப்போது..? மாநில தேர்தல் ஆணையம் ‘தீவிர’ ஆலோசனை!!

உச்ச நீதிமன்ற தீர்ப்பால் ஏற்கனவே வெளியிட்ட தேர்தல் தேதி அறிவிப்பாணையை மாநில தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதனால் புதிய தேர்தல் அட்டவணை எப்போது?வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவும் நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் தேதி அறிவிப்பது தாமதமாகி வருகிறது.

 

உச்ச நீதிமன்றத்தின் நெருக்கடியால், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் டிசம்பர் 27, 30 தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. புதிய மாவட்டங்கள் பிரிப்பால் வார்டு மறு வரையறை, இட ஒதுக்கீடு போன்ற முறையான நடவடிக்கைகளை பின்பற்றாமல்,அவசரக் கோலத்தில் தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்துள்ளதாகக் கூறி, தேர்தலுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்தது.

 

வழக்கு விசாரணையின் போது தமிழக தேர்தல் ஆணையம் தரப்பை நீதிபதிகள் கடுமையாக சாடினர். கடைசியில் பிரிவினைக்கு உள்ளான 9 மாவட்டங்கள் தவிர்த்து எஞ்சிய மாவட்டங்களில் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 9 மாவட்டங்களில், அனைத்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்ட பின் 4 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தவும் அதிரடியாக உத்தரவிடப்பட்டது.

 

இதனால், ஏற்கனவே வெளியிடப்பட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை ரத்து செய்து விட்டு, புதிய அட்டவணையை வெளியிட வேண்டிய கட்டாயத்துக்கு தேர்தல் ஆணையம் ஆளானது. அதன்படி பழைய அறிவிப்பாணை ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணைய செயலாளர் சுப்பிரமணியன் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

இதையடுத்து, புதிய தேர்தல் தேதி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் மாநில தேர்தல் ஆணையமோ, மீண்டும் குளறுபடிகள் நடந்து, உச்சநீதி மன்றத்தில் குட்டு வாங்கிவிடக் கூடாது என கருதுவதாகத் தெரிகிறது. ஏனெனில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவது சந்தேகம் தான் என்றே இன்னும் பல தரப்பினரும் கூறி வருகின்றனர். திமுகவும் தேர்தல் நடைபெறும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றே இப்போதும் கூறி வருகிறது.

 

இதனால் மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி, உயர் அதிகாரிகளுடன் அடுத்தடுத்து ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். நேற்றிரவு தலைமைச் செயலாளர் சண்முகத்தைச் சந்தித்து நீண்ட நேரம் ஆலோசணை நடத்தினார். இன்றும் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் முக்கிய ஆலோசணையில் ஈடுபட்டுள்ளார். இதனால் தேர்தல் தேதி அறிவிப்பு காலதாமதம் ஆகும் என்றே தெரிகிறது.


Leave a Reply