இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து கண்ணியம், சுயமரியாதையுடன் வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஸ்டாலின் ஈழத் தமிழர்களுக்கு அதிகாரப்பகிர்வு செய்வது முன்னுரிமை இல்லை என்று பெரும்பான்மை சிங்களர்களின் விருப்பத்திற்கு எதிராக ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இயலவில்லை என்றும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு கோட்டாபய ராஜபக்ஷ அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்திருப்பதாக ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் வாழும் அனைவரையும் சமமாக கருதுவதாக கூறிய கோட்டாபய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த பிறகு இவ்வாறு பேட்டி அளித்திருப்பது மிகவும் கவலையளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
பெரும்பான்மை, சிறுபான்மை என பிளவு படுத்தி பிரித்து பேசுவது அவர் மனதை ஆட்கொண்டு இருக்கிறது என்பதற்கான அறிகுறியே என்றும் ஸ்டாலின் சாடியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக தலையிட்டு இலங்கையில் தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வு கிடைத்து கண்ணியம் சுயமரியாதையுடன் வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.