உள்ளாட்சி தேர்தல் இட பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது இவ்வாறு தெரிவித்த அவர் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் கூறினார்.
உள்ளாட்சி தேர்தலை முறையாக நடத்தவே நீதிமன்றத்திற்கு சென்றதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கடந்த 3 ஆண்டுகளாக அதிமுக அரசு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் காலம் தாழ்த்தி வந்ததாக விமர்சித்தார்.
பார்ட்டு வரையறை, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு முறையாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே திமுக நீதிமன்றத்தை நாடியது எனவும், தேர்தலை நிறுத்துவதற்காக நீதிமன்றத்திற்கு செல்லவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு உள்ள நிலையில் அதன் வரையறை என்ன என தொடர்ந்து திமுக கேள்வி எழுப்புவதாகவும், ஆனால் அதற்கு மாநில அரசும், தேர்தல் ஆணையமும் விளக்கம் அளிக்கவில்லை எனவும் முகஸ்டாலின் குறிப்பிட்டார்.
தமிழகத்தை பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக நடத்தப்படுவதாக தெரிவித்த ஸ்டாலின் ஆனால் உள்ளாட்சித் தேர்தல் இரு கட்டமாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது வேடிக்கையாக உள்ளதாக கூறினார்.