என் மகளின் சாவில் மர்மம் உள்ளது! நித்யானந்தா தான் அதுக்கு காரணம்!

நித்யானந்தா மீது அடுக்கடுக்காக புகார்கள் எழுந்துள்ள நிலையில் அவரது ஆசிரமத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த திருச்சி பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார்.

 

திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன், ஜான்சிராணி தம்பதியினரின் மூன்றாவது மகள் சங்கீதா. தனது சித்தியுடன் சேலத்தில் உள்ள நித்யானந்தாவிற்கு சொந்தமான ஆசிரமத்தில் தியான வகுப்புக்கு சென்று வந்துள்ளார்.

அதன்பிறகு சங்கீதா பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் 2010ஆம் ஆண்டு தியான வகுப்பில் சேர்ந்து அங்கேயே தங்கி பணியாற்றியுள்ளார். 2014ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி சங்கீதா மர்மமான முறையில் உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.

 

எனினும் தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெங்களூரு ராம்நகர் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். இது தொடர்பான வழக்கு பெங்களூரு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூரு போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என அப்பெண்ணின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். எனவே வழக்கு விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply