குறைந்தபட்ச இருப்பு தொகை பராமரிக்காத வங்கி கணக்கு வைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தால் 1996 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை பொதுத்துறை வங்கிகள் பின்பற்றி வருகின்றன. அந்தவகையில் கடந்த நிதியாண்டில் மட்டும் வாடிக்கையாளர்களுக்கு ஆயிரத்து 996 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தகவலை மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்சிங் தாகூர் தெரிவித்திருக்கிறார். குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காதவர்களிடமிருந்து கடந்த 2016, 2017 ஆம் ஆண்டுகளில் 790 .2 2 கோடி ரூபாய் அபராதத்தை வங்கிகள் வசூலித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
2017 மற்றும் 2018 ஆம் நிதியாண்டில் 18 பொதுத்துறை வங்கிகள் அதிகபட்சமாக 3 ஆயிரத்து 368 .4 2 கோடி ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர். கடந்த நிதியாண்டில் குறைந்தபட்சம் இருப்பு தொகை பராமரிக்காதவர்களுக்கு 1996 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஜன் தன் வங்கி உள்ளிட்ட வங்கி கணக்குகளுக்கு அபராதம் முறை நடைமுறையில் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மந்த நிலையில் இருப்பதாக கூறப்படும் நிலையில் வாடிக்கையாளர்களுக்கு விதித்த அபராதத் தொகை மூலம் 1996 கோடி ரூபாய் வருவாயை பொதுத்துறை வங்கிகள் ஈட்டியுள்ளது சாமானிய மக்களை கலக்கத்தில் ஆழ்த்தி இருக்கிறது.






