மகாராஷ்டிராவில் நேற்று அரங்கேறிய அரசியல் நாடகத்திற்கு, உச்சநீதி மன்றம் முடிவு கட்டுமா? என்பது இன்று தெரிந்துவிடும். சிவசேனா கூட்டணி கட்சிகளின் அவசர வழக்கை விசாரிக்க, விடுமுறை தினமான இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பை உடனே நடத்த உத்தரவிடப்படுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஒரு மாதத்திற்கு மேலாக குழப்பம் நீடித்து வந்தது. முதல்வர் பதவிக்கு நடந்த அடிதடிச் சண்டையில், கூட்டணிக் கட்சியான சிவசேனா உறவை முறித்துக் கொள்ள, பாஜகவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனது. இதைத் தொடர்ந்து, அம்மாநில அரசியலில் இதுவரை ஜென்ம விரோதியாக இருந்த தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன், சிவசேனா கைகோர்த்தது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின், 3 கட்சிகளும் குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கி, சிவசேனா தலைவர் உத்தல் தாக்கரே தலைமையில் ஆட்சி அமைக்கும் முடிவை எட்டின.
நேற்று 3 கட்சிகளும் கட்சி அமைப்பது தொடர்பாக கூட்டாக அறிவிப்பு வெளியிட இருந்த நிலையில், யாருமே எதிர்பாராத அதிரடி திருப்பம் அரங்கேறியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவரும், சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜீத் பவாரின் ஆதரவுடன் பாஜகவின் பட்னாவிஸ் முதல்வராகவும், அஜீத் பவார் துணை முல்வராகவும் பதவியேற்றனர்.ஆளுநர் மாளிகையில் ரகசியமாக நடந்த இந்த பதவியேற்பு விழா பற்றிய செய்திகள், தாமதமாகவே வெளிச்சத்திற்கு வர, மகாராஷ்டிரா மட்டுமின்றி, தேசிய அளவில் பெரும் சூறாவளி சுழன்றடிக்கத் தொடங்கியது.
பாஜகவின் இந்த திரைமறைவு அதிரடியால்,ஒரே நாள் இரவுக்குள் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளவே முடியாமல் பலரும் குழப்பம் அடைந்தனர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளோ அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் விக்கித்து நின்றன. இதற்கெல்லாம் காரணம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் ராஜதந்திரம் என்றும், மோடியுடன் சில நாட்களுக்கு முன்பு நடத்திய சந்திப்பு மூலம் ரகசிய உடன்பாடு கண்டு, சரத்பவார் நாடகமாடி விட்டதாக நேற்று காலை செய்திகள் பரபரத்தன.
ஆனால் சிறிது நேரத்திலேயே, பட்னாவிசுக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவில்லை. அஜீத் பவார் தன்னிச்சையாக எடுத்த முடிவு என சரத்பவார் கொடுத்த விளக்கத்திற்கு பின்னர் தான், உண்மையில் என்ன நடந்தது என்பதே வெட்ட வெளிச்சமானது.அஜீத் பவார் மூலம் தேசியவாத காங்கிரசை பிளவுபடுத்தி, பாஜக ஆட்சி அமைத்ததும், தேவைப்பட்டால் சிவசேனா கட்சியையும் உடைத்து, கணிசமான எம்எல்ஏக்களை இழுக்கவும் ரகசிய திட்டம் தீட்டப்பட்டதும் தெரிய வந்தது.
பாஜகவின் இந்தச் செயல் நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளை கொந்தளிக்கச் செய்தது. ஆட்சி அதிகாரம் மூலம் ஐனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவதாக பாஜகவுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுந்தன. அதே வேளையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள், தங்கள் கட்சி எம்எல்ஏக்களை பாதுகாக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டன. கடைசியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் ஐந்தாறு எம்எல்ஏக்கள் மட்டுமே அஜித் பவாருடன் பாஜக பக்கம் சென்றிருப்பது தெரிய வந்தது.
இந்நிலையில், சட்டப் பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க, பட்னா விசுக்கு 30-ந் தேதி வரை ஆளுநர் அவகாசம் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாக, பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடும் என்பதை தெரிந்து கொண்ட சிவசேனா உள்ளிட்ட 3 கட்சிகளும், கடைசி நம்பிக்கையான உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டியுள்ளன.உடனடியாக சட்டசபையைக் கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக் கோரியும், அவசர வழக்காக விசாரிக்கக் கோரியும் மனு செய்தன.
இதனால், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்றாலும், இன்று காலை 11.30 மணிக்கு, உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான சிறப்பு அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது. இதனால் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிடுமா? என்ற பெரும் எதிர்பார்ப்பு மகாராஷ்டிர அரசியலில் நிலவுகிறது.