தமிழகம், புதுவையில் பரவலாக மழை…!

வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்தது. கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்ததால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

 

நாகை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்தது. இதனால் நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. மழையால் சம்பா சாகுபடி விவசாயிகளும், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வருவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

 

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதலே மழை பெய்தது. புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்தது.


Leave a Reply