காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக மனைவி மீது அபாண்டமான பழியை சுமத்தி சிறைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார் கணவர். ஆனால் போலீசாரின் விசாரணையில் கணவனின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருமணமான புதுமண தம்பதி சம்பிரதாயப்படி விருந்துக்காக பெண்ணின் தாய் வீட்டிற்கு வருகின்றனர். புதுமாப்பிள்ளை திடீரென வயிற்று வலியால் அலறி துடித்தார். பதறிப்போன பெண் வீட்டார் மாப்பிள்ளையை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.
பின்னர்தான் இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறியுள்ளன. ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் கிராமத்தை சேர்ந்தவர் லிங்கைஐயா இவருக்கும் நாகமணி என்ற பெண்ணுக்கும் 10 நாட்களுக்கு முன்பு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்காக எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்து நகை, சீர் வரிசையுடன் நாகமணியை திருமணம் செய்து கொடுத்துள்ளனர் அவரது பெற்றோர். கணவருடன் திருமண விருந்துக்கு உறவினர் வீடுகளுக்கும் சென்று வந்துள்ளார் நாகமணி. கடந்த ஞாயிற்றுக்கிழமை கணவனுடன் தாய் வீட்டிற்கு வந்துள்ளார் நாகமணி.
விருந்து உபசரிப்பு களுக்குப் பின்னர் இரவு தூங்க சென்ற கணவருக்கு நாகமணி பால் கொண்டு கொடுத்துள்ளார். பாலை குடித்த லிங்கையா திடீரென வயிற்று வலியால் அலறி துடித்து உள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் வீட்டார் உடனடியாக மாப்பிள்ளையை ஆனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்போதுதான் குண்டு ஒன்றை வீசியுள்ளார் லிங்கையா. மனைவி நாகமணி தமக்கு கொடுத்த பாலில் விஷம் கலந்து இருப்பதாகவும் அதனை குறித்து தமக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதாகவும் லிங்கை கூறியுள்ளார். தன்னை கொலை செய்வதற்காக மனைவி பாலில் விஷம் கலந்து இருக்கலாம் என கூறி அதிர வைத்தார் அவர்.
இந்த தகவல் கிராமம் முழுக்க பரவிய நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பெண் வீட்டாருக்கும், மாப்பிள்ளை வீட்டாருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. தங்களது மகள் பாலில் விஷம் கலக்கவில்லை என திட்டவட்டமாக மறுத்தனர் பெண்வீட்டார்.
இந்த விவகாரம் காவல் நிலையம் வரை செல்ல போலீசார் விசாரணை மேற்கொண்ட போது தான் லிங்கையாவின் நாடகம் வெளிச்சத்திற்கு வந்தது. லிங்கையா சோணகிரி கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த லிங்கையாவின் குடும்பத்தினர் அவசர அவசரமாக நாகமணியை பெண் பார்த்து அவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்துள்ளனர்.
ஆனால் நாகமணியுடன் வாழ விரும்பாத லிங்கையா மனைவியை சிறைக்கு அனுப்பிவிட்டு காதலியை கரம் பிடிக்க திட்டமிட்டுள்ளார். எனவே இரவு நாகமணி குடிப்பதற்கு பால் கொடுத்ததும் அதனை வாங்கிக்கொண்ட லிங்கையா மனைவிக்கு தெரியாமல் தான் ஏற்கனவே கொண்டு வந்து இருந்த பூச்சி மருந்தை ஆபத்தை ஏற்படுத்தாத அளவுக்கு பாலில் கலந்து அதனை குடித்துள்ளார்.
பின்னர் தான் வயிற்று வலி நாடகத்தை அரங்கேற்றி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். புதுமாப்பிள்ளையின் இந்த நாடகம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து லிங்கையாவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.