கோவைமாவட்டம் அன்னூரில் தமிழக முதல்வரின் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அவிநாசி சட்டமன்ற உறுப்பினரும், சபாநாயகருமான தனபால் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழக அரசு சார்பில் இலவச ஆடுகள்,விவசாய வங்கி கடன், முதியோர் உதவித்தொகை, அம்மா இருசக்கர வாகனம் , இலவச பட்டா என சுமார் 1261 பயனாளிகளுக்கு 5 கோடியே 85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சபாநாயகர் தனபால் வழங்கினார்.
இதனையடுத்து விழாவில் பேசிய சபாநாயகர் தனபால் கோவை சத்தியமங்கலம் சாலை அன்னூர் வழியே செல்லும் போது சரவ ணம்பட்டி முதல் சத்தியமங்கலம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகனங்கள் இதில் சிக்கி பல மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்களின் சிரமத்தை தவிர்க்க கோவை சரவணம்பட்டி முதல் மைசூர் வரை சுமார் 1500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புறவழிச்சாலை திட்டம் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்தார். மேலும், முழுக்க முழுக்க தமிழக அரசின் மூலம் இத்திட்டம் தயாரிக்கப்பட்டு நபார்டு வங்கி உதவியுடன் நிறைவேற்ற உள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் அன்னூர் மற்றும் அவிநாசி பகுதிகளில் உள்ள ஊராட்சி பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் வினியோகம் செய்ய 52 ஊராட்சிகளை இணைத்து அன்னூர்,அவினாசி பகுதிகளில் பொதுவாக ஒரு கூட்டுக்குடிநீர் திட்டம் உருவாக்கபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உட்பட கூட்டுறவு சங்க நிர்வாகிகள், பயனாளிகள் என திரளானோர் கலந்து கொண்டனர்.