இந்த நவீன உலகில், ஒலிம்பியாட் தேர்வுகள் போட்டியிடுவதில் குழந்தையின் திறனையும், அவர்களது உண்மையான திறனை மதிப்பிடுவதையும் அடையாளம் காண உதவுகின்றன. இத்தேர்வுகள் வட்டார அளவிலான பள்ளி பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் போட்டித் தேர்வாகும்.
இந்தநிலையில் ஒலிம்பியாட் கழகம் சார்பில் தேசிய அளவிலான பொது அறிவு, அறிவியல் போட்டிகள் நடத்தப்பட்டது. தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தேர்வு எழுதினார்கள்.
ஒலிம்பியாட் போட்டியில் கலந்துகொண்ட திருப்பூர், திருமுருகன்பூண்டி ஏ.வி.பி டிரஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 4 மாணவிகள் இன்டர்நேஷனல் அளவில் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர். 2 ஆம் வகுப்பிற்கான லெவல் 1 பிரிவில் இப்பள்ளியில் படிக்கும் மாணவி ஃபஹீமா பர்வீன் 40 க்கு 38 மதிப்பெண்கள் எடுத்து இன்டர்நேஷனல் அளவில் 8 ஆம் இடத்தையும், மண்டல அளவில் 4 ஆம் இடத்தையும், பள்ளி அளவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு 1000 மதிப்புள்ள ரொக்க பரிசும், வெள்ளி பதக்கமும், மண்டல அளவில் சிறந்த மாணவி என்ற சான்றிதழும் வழங்கப்பட்டது.
அதேபோல் 1 ஆம் வகுப்பிற்கான லெவல் 1 பிரிவில் மாணவிகள் நிகிதாஸ்ரீ, கனிஷ்கா நிவாஷினி, ஆகிய 2 மாணவிகள் 40 க்கு 38 மதிப்பெண்கள் எடுத்து இன்டர்நேஷனல் அளவில் 7 ஆம் இடத்தையும், மண்டல அளவில் 3 ஆம் இடத்தையும், பள்ளி அளவில் முதல் இடத்தையும், மாணவி அதியா 40 க்கு 37 மதிப்பெண்கள் எடுத்து இன்டர்நேஷனல் அளவில் 13 ஆம் இடத்தையும், மண்டல அளவில் 7 ஆம் இடத்தையும், பள்ளி அளவில் 2 ஆம் இடத்தையும், பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இவர்களுக்கும் 1000 மதிப்புள்ள ரொக்க பரிசும், வெள்ளி பதக்கமும், மண்டல அளவில் சிறந்த மாணவி என்ற சான்றிதழும் வழங்கப்பட்டது. இத்துடன், 4 மாணவிகளும் லெவல் 2 போட்டிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி நிர்வாகிகள், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.