தேனிலவு தம்பதிக்கு நேர்ந்த சோகம்!

திருமணம் ஆன ஒரே வாரத்தில் தேனிலவுக்கு சென்ற தம்பதியின் வாழ்வு பாராகிளைடிங் விளையாட்டால் நிலை குலைந்து போய்விட்டது. சென்னையிலுள்ள அமைந்தகரை துரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

 

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பிரீத்தி என்பவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடைபெற்றது. தேனிலவுக்காக உற்சாகத்துடன் ஹிமாச்சல பிரதேசம் சென்ற இந்த தம்பதியின் வாழ்க்கை தான் தற்போது நிலைகுலைந்து போய் இருக்கின்றது.

 

மணாலியில் இயற்கை அழகை சுற்றி பார்த்த அரவிந்தும் ப்ரீத்தியும் மணிக்கு அருகே உள்ள தோப்பிக்கு சென்றுள்ளனர். அங்கே பிரபலமான பாராகிளைடிங் விளையாட்டில் ஈடுபட அரவிந்த் டிக்கெட் வாங்கியுள்ளார். பாராசூட்டில் பயிற்சி பெற்ற ஒருவருடன் சுற்றுலா பயணி ஒருவரும் இணைந்து பறப்பது தான் இந்த பாராகிளைடிங் விளையாட்டு.

 

ஆனால் அதில் கணவர் விளையாடுவதற்கு பிரீத்தி முதலில் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பின்னர் கணவன் அரவிந்தின் விருப்பத்திற்கு சம்மதித்த ப்ரீத்தி உற்சாகத்துடன் கணவர் பறப்பதை வீடியோ பதிவும் செய்துள்ளார். ஆனால் அதன்பிறகுதான் அந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. விமானி ஹரிராமுடன் பறந்து கொண்டிருந்த அரவிந்த் திடீரென பாராசூட்டில் நிலைதடுமாறி உள்ளார்.

 

அங்கே இருந்த காவல் துறையினரும் சுதாரிப்பதற்குள் பாராசூட்டில் இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமான சில நாட்களில் தேனிலவுக்கு வந்தபோது கண் முன்னாலேயே கணவர் உயிரிழந்த சம்பவம் ப்ரீத்தியை நிலைகுலைய வைத்துவிட்டது.

 

அரவிந்தின் உடலை பெறுவதற்காக அவரது உறவினர்கள் ஹிமாச்சல பிரதேசத்திற்குப் பறந்துள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த பாராசூட் விமானி ஹரிராம் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாதுகாப்பு பெல்ட்டை அரவிந்த் சரியாக அணியாததால் தான் இந்த விபத்து நிகழ்ந்து விட்டதாக குழு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.

 

இந்த கோர விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணையும் நடைபெற்று வருகிறது. பாராகிளைடிங் விளையாட்டால் தேனிலவுக்கு சென்ற தம்பதியின் வாழ்வு நொறுங்கிப்போனது பலரையும் வேதனையடைய வைத்துள்ளது.


Leave a Reply