புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவரை, ஆளும் அதிமுக கட்சியின் மாவட்ட மகளிரணிச் செயலாளர் போல செயல்படுவதாக விமர்சித்த திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏ மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் அரசு அதிகாரிகளை, கரைவேடிடி கட்டாத ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது பல ஆண்டுகளாகவே தமிழகத்தில் சகஜம். இது அதிமுக, திமுக என வித்தியாசம் இல்லாமல் இரண்டு கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் நடந்து வருகிறது. அதிலும் உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் மீதோ இந்த இரு கட்சிகளில் ஒரு கட்சியின் ஆதரவாளர் என்ற முத்திரையே குத்தப்பட்டு விடும்.
இதற்கு விதிவிலக்கான சகாயம் போன்ற நேர்மையான அதிகாரிகளோ, அடிக்கடி பந்தாடப்பட்டு கடைசியில் உப்புச் சப்பில்லாத பொறுப்புகளில் அமர்த்தப்படுவதும் வழக்கமான ஒன்று தான்.
இப்படி ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்து கொள்ளும் ஐபிஎஸ், ஐ.ஏ.எஸ்.உயர் அதிகாரிகள் முதல் கிராமத்தில் பணிபுரியும் கடை மட்ட ஊழியர்கள் மீது எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சி சாயம் பூசுவது, விமர்சிப்பது என்பது சகஜம் தான் என்றாலும், அவர்கள் மீது அவ்வளவாக வழக்குகள் தொடரப்படுவதோ, கைது செய்யப்படுவதோ பெரிய அளவில் நடந்தது இல்லை. அரசு அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுவது, பணி செய்ய விடாமல் தடுப்பது போன்ற காரணங்களுக்காக மட்டுமே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தற்போது, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருக்கும் உமாமகேஸ்வரியை, ஆளும் அதிமுகவின் மாவட்ட மகளிரணிச் செயலாளர் போல செயல்படுவதாக அம்மாவட்ட திமுக செயலாளரும், திருமயம் தொகுதி திமுக எம்எல்ஏவுமான எஸ்.ரகுபதி விமர்சித்துள்ளார்.
இதனால் இப்போது ரகுபதி சிக்கலில் மாட்டியுள்ளார். ரகுபதியின் பேச்சுக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் கொடுக்அப் பட்ட புகாரையடுத்து அடுத்து அவர் மீது திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
எம்.ஜி.ஆர். காலத்திலேயே அதிமுகவில் கோலோச்சிய ரகுபதி, 1991-ல் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அமைச்சராகவும் இருந்தவர்.புதுக்கோட்டை மாவட்டத்தில் செல்வாக்கு படைத்த அரசியல்வாதியும் ஆவார்.
ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவால் அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்டதால், திமுகவில் இணைந்த ரகுபதி, 2004-ல் எம்.பி.யாகி, மத்திய அமைச்சர் பதவி வகித்தவர். தற்போது திமுக மாவட்டச் செயலாளராகவும், திருமயம் தொகுதி எம்எல்ஏவாகவும் உள்ளார்.
மாவட்ட ஆட்சியரை விமர்சித்ததற்காக தம் மீது வழக்குத் தொடரப்பட்டதையடுத்து, முன் ஜாமீன் கேட்டு திருமயம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் எம்எல்ஏ ரகுபதி மனு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.