ஐஐடி மாணவி தற்கொலை – கேரளா விரையும் தனிப்படை

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா செல்கிறார்கள். சென்னை ஐஐடி விடுதியில் கடந்த எட்டாம் தேதி எம்‌ஏ முதலாம் ஆண்டு மாணவி பாத்திமா லத்தீப் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாணவியின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை மேற்கொள்ள மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரளா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

 

மேலும் விடுமுறைக்காக சொந்த ஊர்களுக்கு சென்று உள்ள பாத்திமாவின் வகுப்பு தோழிகளிடமும் விசாரணை நடத்தவும், நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பேராசியர்கள் மூலமாக பாத்திமாவிற்கு தொந்தரவு இருந்ததாக அவருடைய பெற்றோர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக மற்ற மாணவிகளிடம் விசாரணை நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

 

இதற்கிடையே பாத்திமாவின் செல்போன் பதிவுகளின் அடிப்படையில் ஐஐடி பேராசிரியர்கள் சுதர்சன் பத்மநாபன், ஹேமச்சந்திரன் இவருடன் இரண்டாவது நாளாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இதற்கிடையில் நேற்று முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஐ‌ஐ‌டி மாணவர் இருவரும் தங்களுடைய போராட்டத்தை கைவிட்டனர்.


Leave a Reply