சிவாஜி தனிக் கட்சி தொடங்கியது ஏன் என்ற ரகசியத்தை 32 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகன் நடிகர் பிரபு வெளிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆரின் வேண்டுகோளின்படியே தனது தந்தை சிவாஜி தனிக் கட்சி ஆரம்பித்ததாகவும், தோற்போம் என்று தெரிந்தே ஜானகி அம்மையாருடன் கூட்டணி வைத்தார் என்றும் நடிகர் பிரபு தெரிவித்துள்ளார். இதெல்லாம் தெரியாமல், நடிகர்கள் அரசியல் கட்சி தொடங்கினால், சிவாஜியின் நிலை தான் என்று இன்று விமர்சிப்பது வருத்தமாக உள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்களை, மறைமுகமாக நடிகர் பிரபு சாடியுள்ளார்.
தமிழ் திரையுலகில் 60, 70 ஆண்டுகளுக்கு முன்னர் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்தவர்கள் என்றால் அது மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் தான். திரையுலகில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் கடைசி வரை ஒருவருக்கொருவர் நட்பு பாராட்டியே வந்தனர். இன்றைய காலகட்டத்தில் கமலும், ரஜினியும் போலத்தான் அன்றைய காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆரும், சிவாஜியும் இருந்தனர். நேற்றைய கமல் 60 விழாவில், ரஜினி பேசியது போல, கொள்கை, சித்தாந்தங்களில் இருவருக்குமே கருத்து வேறுபாடு இருந்தாலும், இருவரின் ரசிகர் பட்டாளங்கள் அடிக்கடி மோதிக் கொண்டாலும் கூட, கமல், ரஜினி நட்பு தொடர்வது போல, எம்.ஜி.ஆரும், சிவாஜியும் ஒருவருக்கொருவர் பகைமை பாராட்டியதில்லை.
அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு திமுகவின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர்.பாடுபட்டார். அதுபோல கர்ம வீரர் காமராஜர் மேல் கொண்ட அளவுக்கதிகமான பற்று காரணமாக காங்கிரசில் இணைத்துக் கொண்டவர் சிவாஜி.அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதலால், அதிமுக என்ற தனிக் கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர். அரசியலிலும் வாழ்நாள் இறுதி வரை ஜொலித்தார். 3 முறை முதல்வராகி தமிழக மக்களின் நெஞ்சங்களிலும் நீங்கா இடம் பெற்று மறைந்தார்.
ஆனால் சிவாஜியின் ராசி அப்படி இல்லை. காங்கிரசுக்காக பிரச்சார பீரங்கியாக செயல்பட்டாலும் அரசியலில் அவரால் ஜொலிக்க முடியவில்லை. காமராஜரின் மறைவுக்குப் பின்னர் காங்கிரசில் அவருக்கு போதிய முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை. கோஷ்டிகளால் ஓரம் கட்டப்பட்டார். இதனால் மனம் நொந்த சிவாஜி, எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின் 1988-ல் காங்கிரசிலிருந்து வெளியேறி தமிழக முன்னேற்ற முன்னணி என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார்.
அத்துடன் 1989 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக பிளவுபட்டு அதிமுக(ஜெ), அதிமுக(ஜா) என இரு அணிகள் போட்டியிட்டன. இதில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின் அதிமுக(ஜா) அணியுடன் சிவாஜி கூட்டணி வைத்து போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் இந்தக் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது.சிவாஜியே தனது சொந்த ஊரான திருவையாறு தொகுதியில் தோற்றுப் போனார்.அதன் பின் சிவாஜியின் கட்சியே இல்லாமல் போனது தனிக்கதை.
இப்போது தமிழக அரசியல் கருணாநிதி ஜெயலலிதா போன்ற மிகப் பெரும் ஆளுமை மிக்க தலைவர்கள் இல்லாத நிலையில் தத்தளிக்கிறது. இதையே தலைவருக்கான வெற்றிடம் இருப்பதாகவும், அதை தம்மால் தான் நிரப்ப முடியும் எனக் கூறி பலரும் கட்சி தொடங்கி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல் கட்சி தொடங்கி விட்டார். சூப்பர் ஸ்டார் ரஜினியும் கட்சி தொடங்கப் போவதாகக் கூறி பாவ்லா காட்டி வருகிறார். எப்படியும் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் ரஜினி கட்சி தொடங்கி விடுவார். அடுத்த முதல்வர் ரஜினிதான் என்று கூறி அவரது ரசிக பட்டாளங்கள் களம் காண தயாராகி வருகின்றனர்.மேலும் தமிழகத்தில் பாஜக காலூன்ற வேண்டுமானால், ரஜினியை இழுத்துப்போட்டு விட வேண்டும் என பாஜக மேலிடமும் அவருக்கு தூது மேல் தூது விடுகிறது என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், தமிழக அரசியல் களத்தில் பிரபல நடிகர்கள் குதிப்பதை ஆளும் அதிமுக தரப்பில் சமீப காலமாக விமர்சிக்க ஆரம்பித்துள்ளனர்.தமிழக அரசியலில் வெற்றிடம் என்பதே இல்லை. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் ஜெயிக்க முடியாது. நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் சிவாஜிக்கு ஏற்பட்ட கதி தான் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர்கள் பலரும் சமீப காலமாக பேசி வருகின்றனர்.
இதில், உதாரணத்திற்காக மறைந்து விட்ட நடிகர் திலகம் சிவாஜியின் பெயரையும், அவர் ஆரம்பித்த கட்சியின் கதி தெரியுமா? என்று பேசி வருவது சிவாஜி குடும்பத்தாரை பெரிதும் மனம் நோகச் செய்து விட்டதாகவே தெரிகிறது.
இதனால் கொதித்துப் போன சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு, சிவாஜி கட்சி ஆரம்பித்தது ஏன்? என்ற ஒரு உண்மை ரகசியத்தை வெளிப்படுத்தி, அதிமுகவினருக்கே ஒரு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
அரசியலில் பெரிய பதவிகளுக்கான ஆசை என் தந்தைக்கு என்றுமே இருந்ததில்லை .
அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த எம்.ஜி.ஆர் வேண்டுகோள் வைத்ததாலேயே என் தந்தை சிவாஜி தனிக் கட்சியை ஆரம்பித்தார்.1989 தேர்தலில் தோற்போம் என்று தெரிந்தே எம்.ஜி.ஆர் மனைவி ஜானகி அம்மா அணியுடன் சிவாஜி கூட்டணி வைத்தார்.
சகோதரன் என்ற பூரண நம்பிக்கையில் எம்.ஜி.ஆர் சொன்ன வார்த்தையை தட்டாமல் அரசியலில் இறங்கினார், என் தந்தை. ஆனால் உண்மை என்னவென்று தெரியாமல் தற்போது என் தந்தையின் அரசியல் பிரவேசம் பற்றி விமர்சிப்பது வருத்தமளிக்கிறது என்று நடிகர் பிரபு தெரிவித்துள்ளார்.
கட்சி தொடங்கிய சிவாஜியின் கதி தெரியுமா? என்று இப்போது சிவாஜியை விமர்சிப்பவர்களுக்கு, அதுவும் அதிமுகவினருக்கு, எம்.ஜி.ஆர். சொல்லித்தான் சிவாஜி கட்சியே ஆரம்பித்தார் என்ற ரகசியத்தை நடிகர் பிரபு வெளிப்படுத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றே கூறலாம்.