இலங்கை அதிபர் தேர்தல்; சஜித் பிரேமதாசா முன்னிலை..! தமிழர்கள், சிறுபான்மையினர் பகுதிகளில் அமோகம்!!

இலங்கை அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

 

இலங்கையின் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தத் தேர்தல் ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனா கட்சி சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சே, புதிய ஜனநாயக முன்னணி சார்பில் சஜித் பிரேமதாசா உள்பட 35 பேர் போட்டியிட்டனர். நேற்று பெரும் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாகவும், விறுவிறுப்பாகவும் வாக்குப் பதிவு நடைபெற்றது.மொத்தம் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. குறிப்பாக தமிழர்கள் மற்றும் சிறு பரன்மை இஸ்லாமியர்கள் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், வழக்கத்துக்கு மாறாக வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. பல்வேறு அமைப்புகள் தேர்தலை புறக்கணிக்க அழைப்பு விடுத்திருந்தும், அதை புறந்தள்ளி விட்டு இந்தப் பகுதி மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர்.

 

நேற்று மாலை 5 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தவுடன், வாக்குகள் எண்ணும் பணியும் உடனே தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் கோத்தபய ராஜபக்சேவுக்கு அமோக வாக்குகள் கிடைத்து முன்னிலை பெறத் தொடங்கினார். தபால் வாக்குகளில், யாழ்ப்பாணம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட் டுமே சஜித் பிரேமதாசா கூடுதல் வாக்குகளை பெற்றார்.

தொடர்ந்து, பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. இதிலும் தொடக்கத்தில் முதல் இரண்டு சுற்றுகளில் கோத்தபய ராஜபக்சேவே முன்னிலை பெற்றார். ஆனால் திடீர் திருப்பமாக இன்று அதிகாலை முதலே சஜித் பிரேமதாசா முன்னிலை பெறத் தொடங்கினார். அடுத்தடுத்து சுற்றுகளிலும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதற்கு காரணம், தமிழர்கள், மற்றும் சிறுபான்மை இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், சஜித் பிரேமதாசாவுக்கு அமோகமாக வாக்குகள் கிடைத்ததே காரணம். இந்தப் பகுதிகளில் 80% அதிகமான வாக்குகள் அவருக்கு கிடைத்துள்ளன. இங்கு கோத்தபய ராஜபக்சேவுக்கு சொற்ப அளவிலான வாக்குகளே கிடைத்துள்ளன.

 

தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி ஓட்டு எண்ணிக்கை முடிவில், கோத்தபய ராஜபக்சேவை விட சஜித் பிரேமதாசா சுமார் 1.33 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

வாக்கு எண்ணிக்கை 8 மணி நிலவரம் :

சஜித் பிரேமதாசா : 8, 28, 078

கோத்தபய ராஜபக்சே : 6,95,503

 

இதுவரை சுமார் 15% வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ள நிலையில், இறுதி முடிவுகள் வெளியாக இன்று மாலை வரை ஆகிவிடும் என்று கூறப்படுகிறது. சிங்கள வாக்காளர்கள் மத்தியில் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆதரவாகவும், தமிழர்கள் மற்றும் சிறுபான்மையினர் வாக்குகள் சஜித் பிரேமதாசாவுக்கும் ஆதரவாக விழுந்துள்ளதாக கூறப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கை நிலவரம் கடைசி வரை இருவருக்கும் இடையே இழுபறியாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

 

கடைசியாக கிடைத்த தகவல்படி சஜித் பிரேமதாசாவை விட கோத்தபய ராஜபக்சே 37 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.

வாக்குவிபரம்:

கோத்தபய ராஜபக்சே : 12,39, 181

சஜித் பிரேமதாசா :12, 01,898


Leave a Reply