நாளை மறுநாள் தமிழக அமைச்சரவைக் கூட்டம் ; உள்ளாட்சித் தேர்தல் குறித்து ஆலோசனை!!

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் உள்பட பல்வேறு முக்கியப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

தமிழகத்தில் அடுத்த மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே உள்ளாட்சித் தேர்தலுக்கான முஸ்தீபுகளில் அனைத்துக் கட்சியினரும் மும்முரமாகியுள்ளனர். தேர்தலில் போட்டியிட விரும்பும் தங்கள் கட்சியினரிடம் அதிமுக, திமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெறுவதைக் கூட நடத்தி முடித்துவிட்டன.

 

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் (19-ந்தேதி) காலை 11 மணிக்கு கூடும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூடவுள்ள இந்தக் கூட்டத்தில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக முக்கிய விவாதமும், முடிவும் எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

மேலும், மாநில தகவல் ஆணையர் பொறுப்பில் இருந்த ஷீலா பிரியா ஓய்வு பெற்றுவிட்டதால், புதிய தகவல் ஆணையரை தேர்வு செய்வது, புதிய தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.

 

அரசு முறைப் பயணமாக10 நாட்கள் அமெரிக்கா சுற்றுப்பயணம் சென்றுள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நாளை சென்னை திரும்புகிறார். எனவே அவரும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அறிவிப்பு எந்நேரமும் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ள நிலையில், அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது.


Leave a Reply