ரஜினிக்காக சிறப்பு யாகம் நடத்திய அண்ணன் சத்ய நாராயணா..!அடுத்தாண்டு அரசியலில் குதிப்பது உறுதியாம்!!

நடிகர் ரஜினிக்காக அவருடைய அண்ணன் சத்ய நாராயணா தனது குடும்பத்தினருடன், தர்மபுரி அருகேயுள்ள கால பைரவர் கோயிலில் இன்று அதிகாலை சிறப்பு யாகம் நடத்தினார். ரஜினி, அடுத்தாண்டு அரசியலுக்கு வருவது உறுதி என்றும் சத்ய நாராயணா தெரிவித்துள்ளார்.

 

அரசியலுக்கு இதோ வருகிறார்… அதோ வருகிறார்… என்று ரஜினி பற்றிய பரபரப்பான செய்திகளைக் கேட்டுக் கேட்டு அவரது ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் புளித்தே போய்விட்டது என்றே கூறலாம். கடந்த 1996-ம் ஆண்டு முதலே ரஜினி அரசியலில் குதிக்கப் போவது உறுதி என்பது போல திடீர் திடீர் என தமிழக அரசியலில் பரபரப்பு நெருப்பு பற்றிக் கொள்வதும், பின்னர் திடீரென புஷ்வாணமாக பொசுங்கிப் போய் காணாமல் போவதும் என கண்ணாமூச்சி காட்டுவதுமாகவே உள்ளது ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்தி.

 

ஒரு வழியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமது ரசிகர் பட்டாளங்களை ஒன்று திரட்டிய ரஜினி, கண்ணா… நான் அரசியலுக்கு வரப்போவது நிச்சயம். நமது இலக்கு 2021 சட்டப்பேரவை பொதுத் தேர்தல் தான் என்றும் அறிவித்தே விட்டார். ஆனால் இரு ஆண்டுகள் தான் கடந்தனவே தவிர, 2021-ம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலும் நெருங்கி விட்டது தான் மிச்சம். ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதற்கான ஆரம்பக் கட்டப்பணிகள் கூட தொடங்கியதற்கான எந்த அறிகுறியும் இன்னும் தென்படவில்லை.

ஆனாலும் ரஜினியின் அரசியல் கட்சி பற்றிய பரபரப்பும், எதிர்பார்ப்பும் இப்போதும் தமிழகத்தில் இருந்து கொண்டு தான் உள்ளது. ரஜினியும் அவ்வப்போது பஞ்ச் டயலாக் மாதிரி ஏதேனும் கருத்துக்களை கூறி சூடு குறையாமல் வைத்துக் கொண்டுள்ளார் என்பதும் உண்மை. அதிலும் பாஜக பக்கம் உள்ள தமது விசுவாசத்தால், அடிக்கடி தமது கருத்துக்களை மாற்றி, மாற்றி பேசி வருவதும், குழப்பி வருவதும் தமிழக அரசியல் களத்தில் சூடேற்றி வருகிறது.

 

இந்நிலையில் ரஜினி நலமுடன் இருக்க வேண்டும்; அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்பதற்காக, அவருடைய சகோதரர் சத்ய நாராயணா, இன்று அதிகாலை சிறப்பு யாகம் நடத்தியது மேலும் பரபரப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகேயுள்ள புகழ் பெற்ற கால பைரவர் கோயிலில் தான் இந்த யாகம் இன்று நடைபெற்றது. அதிகாலையில் சுமார் 3 மணி நேரம் நீடித்த இந்த யாகசாலை பூஜையில் தமது குடும்பத்தாருடன் சத்யநாராயணா பங்கேற்றார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினியின் அண்ணன் சத்ய நாராயணா, ரஜினி எதற்கும் ஆசைப்படாதவர். அரசியலுக்கு வந்தாலும் எதற்கும் ஆசைப்படமாட்டார். அடுத்தாண்டு ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். நல்லாட்சியை தர வேண்டும் என்பதற்காகவே அவர் அரசியலுக்கு வருகிறார் என்று சத்ய நாராயணா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

 

ஆமா.. ரஜினி இப்போதாவது உறுதியாக அரசியலுக்கு வருவாரா? எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்!


Leave a Reply