இன்று குழந்தைகள் தினம் – செல்போனுக்கு சிறிது ஓய்வு தந்து அவர்களுடன் செலவிடுங்க!

இன்று குழந்தைகள் தினம்! பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான இன்று, அவருக்கு மிகவும் விருப்பமான குழந்தைகள் தினமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

 

நேரு மாமா என்று குழந்தைகளால் அன்போடு அவர் அழைக்கப்படுகிறார். அவர், குழந்தைகளை பற்றி குறிப்பிட்ட போது, “குழந்தைகளுக்கு பாதுகாப்பான அன்பான சூழ்நிலையை அளித்து, அவர்கள் வளர்ந்து வரும் வேளையில் சமமான வாய்ப்புகளை வழங்கும் போதுதான், தேசத்தின் வளர்ச்சியில் அவர்கள் பங்கு கொள்பவர்களாக வளர்வார்கள்” என்றார்.

 

நாளைய இந்தியாவின் வருங்கால தூண்கள், இன்று வளமாக இருக்க வேண்டும் என்பதற்காக, குழந்தைகளின் ஆரோக்கியம், அவர்களின் விருப்பம், கல்வி, செயல் சிறக்க அரசுகள் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றது . அத்துடன், அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கான விதவிதமான வண்ண அலங்காரங்களுடன் போட்டிகள் நடத்தப்படும்.

 

இந்நாளில் தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றோர் இல்லங்களில் குழந்தைகளுக்கு புதிதாக பரிசுகள் இனிப்புகள் வழங்கி கொண்டாவார்கள். இந்த தேசத்தின் மிகப்பெரிய நாளைய உந்துசக்தி இன்றைய குழந்தைகள் ஆவார்கள் என்பதை இந்த சமுகம் உணர்ந்துள்ளது.

 

ஆனால், மொபைல் போன் வருகை, குழந்தைகளின் பாதுகாப்பில் ஒருவித அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. புத்தகம் படிக்கும் குழந்தைகள், டிவியின் வருகைக்கு பிறகு மாலை நேரங்களில் சிறிது நேரம் அதை பார்ப்பார்கள். ஆனால், ஆண்ட் ராய்டு மொபைல்போன்களின் வருகைக்கு பிறகு, குழந்தைகளை அவை அடிமையாக்கிவிட்டன.

 

ஓடியாடி மைதானத்தில் விளையாடிய குழந்தைகள், இன்று மொபைலில் வீடியோ கேம் விளையாடி, தங்களின் பெரும்பாலான நேரத்தை செலவிடுகின்றனர். இது கண்ணுக்கு கெடுதல், அறிவுத்திறன் வளச்சிக்கு கேடு தரக்கூடியது.

 

மொபைல் போன் வருகைக்கு பிறகு பெற்றோரும், குழந்தைகளும் அதில் தான் மூழ்கி இருக்கிறார்கள். பள்ளி வகுப்பு முடிந்து வீடும் திரும்பும் குழந்தைகள் அடுத்து மொபைல் போன் அல்லது டிவியே கதி என்று இருப்பதிய, பல வீடுகளின் இன்று பார்க்க முடிகிறது.

 

இதை பெற்றோர்கள் முயற்சித்தால் மட்டுமே மாற்ற முடியும். அதற்கு, தங்களின் செல்போனை சிறிது நேரமாவது ஒதுக்கி வைத்துவிட்டு, குழந்தைகளுடன் செலவிட வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் தான், இன்றிரவு 7:30 முதல் 8: 30 வரை வீட்டில் உள்ளவர்கள் தங்கள் செல்போனை ஸ்விச் ஆப் செய்துவிட்டு, குழந்தைகளுடன் செலவிட, பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

 

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கனவு இருக்கும். அதை தெரிந்துகொண்டு, நிறைவேற்ற பெற்றோர் முயற்சிக்க வேண்டும். அதற்கு, குழந்தைகளுடன் நேரம் செல்விடுவது மிக அவசியம். உங்கள் உலகமே உங்கள் குழந்தைகள் தான் என்பதால், நீங்கள் இதை நிச்சயம் செய்வீர்கள் என்று நம்பலாம்!


Leave a Reply