அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு அளிக்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.
உத்தரப் பிரதேச மாநிலத்தில், அயோத்தி உள்ளிட்டபல்வேறு பகுதிகளுக்கு 4 ஆயிரம் துணை ராணுவப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆளில்லா உளவு விமானங்களும் பயன்படுத்தப்பட உள்ளன.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய பகுதியை தடுப்புகள் போட்டு மூடி துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில், திங்கட்கிழமை வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளன.
மாநிலத்தின் முக்கிய பகுதிகளான லக்னோ, மீரட், நொய்டா, அலிகார், அசம்கார், பாலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். அலிகாரில் இன்று ஒருநாள் மொபைல் போன், இணையசேவை நிறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், டெல்லியில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். உச்சநீதிமன்றத்திற்கும் நீதிபதிகளுக்கும் துணை ராணுவ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷன், சந்திரசூட், அப்துல் நசீர் ஆகியோருக்கு இஸட் + அளவிலான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னை உள்ளிட்ட இடங்களில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.