தொண்டி கடற்கரையில் வெடிமருந்து வைத்து மீன் பிடிக்க முயன்ற 4 பேர் மீது வழக்கு!

தொண்டி கடற்பகுதியில் வெடிவைத்து மீன்பிடிக்க முயன்றவர்களின் படகு மற்றும் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்டு, அது தொடர்பாக 4 பேர் மீது தொண்டி கடலோர காவல்படையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, தொண்டி, அருகே உள்ள புதுக்குடி கடற்கரை பகுதியில் போலீசார் இரவு நேர ரோந்து பணிக்கு சென்ற போது, அங்கு சிலர் படகு ஒன்றில் மீன்பிடிக்க செல்ல தயாராக இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடியுள்ளனர். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த படகை சோதனையிட்டபோது அதில் பத்து ஜெலட்டின் குச்சிகள், 5 டெட்டனேட்டர், மின் வயர் இருந்தது தெரிய வந்தது.

இது கடலில் வெடிவைத்து மீன் பிடிப்பதற்காக இந்த வெடி பொருட்களை அவர்கள் எடுத்துச்செல்ல இருந்ததாக தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து படகையும் , வெடி பொருட்களையும், கடலோர காவல் படையினர் தொண்டி புதுக்குடி மீனவர்கள் கண்ணன், ராமச்சந்திரன், ராம்குமார், அப்பாஸ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். படகையும், வெடி பொருட்களையும் பறிமுதல் செய்த போலீசார் தலைமறைவான மீனவர்களை தேடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

தொண்டி பகுதியில் கடலில் வெடிவைத்து மீன் பிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருவதும், வழக்குகளும் பதிவு செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இதற்கு எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது என மற்ற மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


Leave a Reply