மு.க.ஸ்டாலின் குறித்த எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப் பட்டது…! அமைச்சர் மா.பா. “அந்தர் பல்டி”!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி தாம் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் பல்டி அடித்துள்ளார். அத்துடன் தமக்கு எதிரான போராட்டத்தை திமுகவினர் தவிர்க்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியதற்கும் நன்றி என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

 

1975-ல் இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது மிசா (அவசர நிலை) சட்டத்தை கொண்டு வந்தார். அப்போது மு.க.ஸ்டாலினும் கைதானார். மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின் கைதானது பற்றி சமீபத்தில் ஒரு விவாதத்தில் அமைச்சர் பாண்டியராஜன் கருத்து தெரிவித்தது திமுகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திவிட்டது.

 

அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், மு.க.ஸ்டாலின் மிசா காலத்தில் கைது செய்யப்பட்டார். ஆனால் மிசா சட்டத்தில் கைதாகவில்லை. அவர் கைது செய்யப்பட்டது வேறு ஒரு மோசமான வழக்கு காரணமாக கைது செய்யப்பட்டார். அவருக்கும் மிசாவுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் மிசாவில் கைதான தாக மு.க.ஸ்டாலின் ஏமாற்றுகிறார் என்ற ரீதியில் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறிய கருத்தால் திமுகவால் கொந்தளித்துள்ளனர். இதனால் கடந்த 2 நாட்களாக அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவருடைய உருவ பொம்மையையும் பல இடங்களில் எரித்தனர். இதனால் அமைச்சர் பாண்டியராஜன் வீடு முன்பு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அமைச்சர் பாண்டியராஜன் கூறிய கருத்துக்கு பதிலடி தரும் வகையிலும், திமுகவினருக்கு அறிவுரை கூறும் வகையிலும் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், திமுகவின் தியாக வரலாற்றை திரித்துக் கூறும் முயற்சி என்றும், அமைச்சர் பாண்டியராஜனின் தராதரம் அவ்வளவுதான் என்றும் மு.க.ஸ்டாலின் சாடியிருந்தார். அத்துடன் திமுகவினர், அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிரான போராட்டங்களை கைவிட்டு, கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துமாறும் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியிருந்தார்.

 

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் குறித்து தாம் கூறிய கருத்து தவறுதலாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் விளக்கமளித்து, இந்தப் பிரச்னையில் திடீரென பல்டியடித்துள்ளார்.தாம் பேசியது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் விளக்கமளித்துள்ளதாகவும் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமக்கு எதிரான போராட்டங்களை தவிர்க்குமாறு திமுகவினருக்கு அறிவுறுத்தியுள்ள மு.க.ஸ்டாலினுக்கு நன்றியும் தெரிவித்து, ஒரேயடியாக பின் வாங்கி இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுள்ளார் அமைச்சர் மா.பா.பாண்டியராஜன்.


Leave a Reply