ராமர் கோயில் தீர்ப்பு : அடக்கி வாசிங்க..! மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி “வாய்ப்பூட்டு”

அயோத்தி வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், தீர்ப்பு குறித்த கருத்துக்களை அனாவசியமாக ஊடகங்களில் பேசக்கூடாது என மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜகவினருக்கு பிரதமர் மோடி வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.

 

அயோத்தியில், பல காலமாக நீடித்து வந்த சர்ச்சைக்குரிய ராமர் கோயில் விவகாரம் முடிவுக்கு வரவுள்ளது. அங்குள்ள சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றத்தின், ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, விசாரணையை முடித்து தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தது. இந்த அமர்வில் இடம்பெற்றிருந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் 17-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால் அதற்கு முன்னதாகவே இறுதித் தீர்ப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக வரும் 13-ந் தேதி தீர்ப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அயோத்தி நிலம் தொடர்பான, இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அயோத்தியில் ராணுவமும், துணை ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

மேலும் நாடு முழுவதும் பல்வேறு உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தும் வகையில் செய்திகள் வெளியாவதைத் தடுக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களும் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.நாடு முழுவதும் போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் அனைவரும் விடுமுறை எடுக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில், அயோத்தி தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பிரதமர் மோடி, மத்திய அமைச் சர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, வரவுள்ள அயோத்தி தீர்ப்பு குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எதையும் பேசி வம்பில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என்றும், தீர்ப்பு குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க வேண்டாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை கூறியதாகவும் கூறப்படுகிறது. இதே போன்று பாஜக நிர்வாகிகளும் அடக்கி வாசிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.


Leave a Reply