கொலை செய்துவிட்டு, கைதி படம் பார்த்த கொள்ளையன்

நள்ளிரவு நேரம், கைதி திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன் போலீஸ் பட்டாளம் காத்துக்கொண்டிருக்கிறது. படம் முடிந்து வெளியே வரும் கூட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நபரை மடக்கிப் பிடித்தனர் போலீசார்.

 

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி ஒருவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த பணத்துடன் எந்தவிதமான குற்ற உணர்வுமின்றி படம் பார்த்துவிட்டு வந்தவரைதான் போலீசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

 

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் நடந்தது எங்கே? திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் ராமச்சந்திரன், ராமேஸ்வரி தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். பிள்ளைகள் இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். 70 வயதான ராமச்சந்திரனும், 65 வயதான மனைவி ராஜேஸ்வரியும் தனியாக வசித்துவந்தனர்.

 

ராமச்சந்திரன் சொந்த வேலையாக திருத்துறைப்பூண்டி சென்று விட்டு மாலை வீடு திரும்பிய போது ராஜேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். பீரோவில் இருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்துறைபூண்டி போலீசார் ராஜேஸ்வரியின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

பின்னர் கொலை நடந்த இடத்தை ஆய்வு செய்தபோது வீட்டின் வாசலில் ஒரு ஜோடி தேய்ந்துபோன செருப்பு கிடந்துள்ளது. அந்த செருப்பு திருத்துறைபூண்டி வாலமா புரத்தை சேர்ந்த சலவை தொழிலாளி முருகானந்தத்தின் உடையது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.ராமச்சந்திரன் வீட்டில் இருந்த துணிகளை வாங்கி சென்று வெளுத்துக் கொடுத்துவிட்டு பணம் வாங்கி செல்வது முருகானந்தத்தின் வழக்கம் என்பதும் இதற்காக ராமச்சந்திரன் வீட்டிற்கு முருகானந்தம் அடிக்கடி வந்து செல்வதும் தெரியவந்தது.

 

இதையடுத்து முருகானந்தத்தின் செல்போன் சிக்னலை ஆய்வு செய்தபோது அவர் திருத்துறைப்பூண்டியில் உள்ள எஸ்என்எஸ் திரையரங்கில் கைதி படம் பார்த்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. நள்ளிரவு வரை திரையரங்கின் வெளியே காத்திருந்த போலீசார் படம் முடிந்து வெளியே வந்தபோது தான் முருகானந்தத்தை மடக்கிப் பிடித்தனர்.

 

காவல் நிலையத்திற்கு முருகானந்தத்தை அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது மூதாட்டி படுகொலையின் பின்னணி தெரிய வந்துள்ளது. வழக்கம்போல சலவை செய்த துணிகளை கொடுத்து விட்டு பணம் வாங்குவதற்காக முருகானந்தம் ராமச்சந்திரனின் வீட்டிற்கு சென்றுள்ளார். படம் எடுப்பதற்காக ராஜேஸ்வரி பீரோவை திறந்தபோது அதில் அதிக அளவில் பணம் இருந்ததை முருகானந்தம் பார்த்துள்ளார்.

 

அந்த பணத்தை கொள்ளையடிக்க முடிவு செய்து வீட்டில் இருந்த கத்தியை எடுத்து ராஜேஸ்வரியை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பீரோவில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அவசரத்தில் தனது செருப்பை அங்கேயே விட்டு விட்டார்.

 

இதன் பின்னர்தான் தான் கொலை செய்ததை யாரும் பார்க்கவில்லை என்ற நினைப்பில் கைதி திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். கொலை நடந்த 6 மணி நேரத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Leave a Reply