கண்ணீர் வரவழைக்கும் வெங்காயம் விலை: கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை

வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வருமளவுக்கு கிடுகிடுவென்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவது குறித்து, தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்தியுள்ளது.

 

தமிழகம் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெங்காயம் அதிகம் விளையக்கூடிய மாநிலங்களில் அண்மையில் பலத்த மழை பெயதது. இதில் வெங்காயம் சாகுபடிகள் கடுமையாக பாதித்தது.

 

இதன் காரணமாக, காய்கறி சந்தைகளுக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து கடுமையாக குறைந்து, அதன் விலை கிடுகிடுவென்று உயரத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.30 என்றிருந்த நிலையில், தற்போது ரூ.60, ரூ.80 என்று விற்பனையாகிறது. சமையலில் அத்தியாவசிய பொருளான வெங்காயத்தின் விலை உயர்வு, ஏழை, நடுத்தர குடும்பத்தினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

 

இந்நிலையில், முதல்வர் பழனிசாமி உத்தரவின் பேரில் சென்னை தலைமை செயலகத்தில், இதுதொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

இக்கூட்டத்தில், சில்லரை வியாபாரிகள் 10 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாகவும், மொத்த விற்பனையாளர்கள் 50 மெட்ரிக் டன்னுக்கு அதிகமாகவும் வெங்காயம் கையிருப்பு வைத்திருக்கக் கூடாது. அப்படியிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீதும், அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

 

மேலும், வெங்காயம் விலை, வரத்து நிலவரத்தை கண்காணிக்க குழு அமைத்து, ஒவ்வொரு பகுதியாக சென்று ஆய்வு பணி மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது. வெங்காயம் விலையை கட்டுக்குள் வைக்க, மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, உடனடியாக, தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய அலுவலர்கள், மகாராஷ்டிராவின் நாசிக் பகுதிக்கு சென்றுள்ளனர்.

 

தமிழக அரசின் நடவடிக்கையால், வெங்காயம் விலை கட்டுக்குள் இருக்கும்; அடுத்த ஓரிரு தினங்களில் பெரிய வெங்காயம் விலை சற்று குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் வரத்து அதிகரிப்பால் பெரிய வெங்காயத்தின் விலை சற்று குறைந்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.70இல் இருந்து ரூ.66ஆக குறைந்துள்ளது.


Leave a Reply