பாங்காக்கில் நடைபெற்ற உச்சி மாநாட்டின் நிறைவில், ஆசிய மண்டல பொருளாதார கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா மறுத்துவிட்டது. இது இந்திய விவசாயிகளின் நலனை பாதிக்கும் என்று அது விளக்கம் அளித்துள்ளது.
ஆசியான் கூட்டமைப்பில் உள்ள 10 நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய 6 நாடுகளும் பங்கேற்கும் ஆசிய மண்டல பொருளாதார கூட்டு மாநாடு, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்றது.
இதில், ஆசிய பிராந்தியத்தில் இம்மாநாட்டில், 16 நாடுகளும் இணைந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை எட்டும் நோக்கில் பேச்சுவார்த்தை மேற்கொண்டன. எனினும், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை.
இதில் இந்தியா கையெழுத்திட்டால், சீனா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலிவான விவசாய உற்பத்திப் பொருட்கள், பல்வேறு பிற பொருட்கள் இந்திய சந்தைக்குள் நுழையும். அது, உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்படும் சூழல் ஏற்படும் என்பதால், பிரதமர் மோடியின் அரசு இதை ஏற்கவில்லை.
பாங்காக் மாநாட்டில் இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இது போன்ற முக்கிய முடிவுகளில் இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள், தொழில்துறையினரின் நலனை கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அனைத்து நாடுகளுக்கும் சமமான பலன்களே கிடைக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அனைத்து இந்தியர்கள் நலன் சார்ந்தே முடிவெடுக்க வேண்டும் என்பதால், வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியாவால் கையெழுத்திட முடியவில்லை என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இந்தியர்களின் முக்கிய நலன்கள் சார்ந்த விவகாரத்தில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று, பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்ததாக, வெளியுறவுத்துறை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தமது தாய்லாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று அதிகாலை, பிரதமர் மோடி புதுடெல்லி திரும்பினார்.