வங்க கடலில் நாளை புதிய புயல் உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை இந்தாண்டு ஆரம்பத்தில் இருந்தே கைகொடுத்து வருகிறது. அவ்வப்போது கடலில் புயல்கள் உருவாகி, அதன் எதிரொலியாக பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்த நிலையில், மீண்டும் ஒரு புயல் சின்னம் உருவாக உள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்ததாவது:
அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று மதியம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியிருக்கிறது. நாளை இது மேலும் வலுவடைந்து, புயலாக மாறும். இதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும். மணிக்கு 70 கி.மீ முதல் 80 கி.மீ வரை வங்கக்கடலில் காற்று வீசக்கூடும்.
எனவே மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவித்தார். இந்த புயலானது, வடக்கு மற்றும் வடமேற்கு திசை நோக்கி ஒடிசாவை நோக்கி நகரக்கூடும். தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.
இந்நிலையில், நாகை, புதுச்சேரி, கடலூர், பாம்பன் துறைமுகங்களில், ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.