எம்பிபிஎஸ் முடித்து விட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் எம்டி, எம்எஸ் போன்ற முதுநிலை படிப்புகளை படிக்க விரும்பினால் அவர்களுக்கு மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இந்த இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை.
இதன் காரணமாக அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் தங்களுடைய மேல் படிப்புகளை தொடர்வதில் பிரச்சினை ஏற்படுகிறது. இது மருத்துவர்கள் தங்களை தரம் உயர்த்தி கொள்வதிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே மீண்டும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது மருத்துவர்களின் கோரிக்கை. மருத்துவக் கல்லூரிகளுக்கு என குறைந்தபட்ச தேவைகளை இந்திய மருத்துவ கவுன்சில் நிர்ணயித்துள்ளது.
இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழக அரசு பல பணியிடங்களை ரத்து செய்து வருவதாக அரசு மருத்துவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். எனவே இதனைப் பயன்படுத்தி கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 800 பணியிடங்கள் இவ்வாறு ஓழிக்கப்பட்டதாக கூறும் மருத்துவர்கள் இதனால் மருத்துவ சேவை கடுமையாக பாதிக்கப் படுவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.
எந்தளவுக்கு நோயாளிகள் வருகிறார்களோ அந்த அளவுக்கு படுக்கைகளையும் மருத்துவர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதும் மருத்துவர்கள் கோரிக்கையாக உள்ளது. முதுநிலை படிப்பை மேற்கொள்ளும் அரசு மருத்துவ மாணவர்களை சரியான பணியிடங்களில் நியமனம் செய்யாமல் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படிப்பை முடித்தவர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாகவும் உடனடியாக இதனை சரி செய்ய வேண்டும் என்பதும் மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.
தற்போது அரசு மருத்துவர்கள் விதியின் படி, 20 ஆண்டுகள் பணியை முடித்த பிறகு தான் நான்காம் நிலை மருத்துவ அதிகாரியாக உயர்வு பெற்று ஒரு லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வரை சம்பளத்தை எட்ட முடியும். இளநிலை, முதுநிலை சிறப்பு படிப்புகளை முடித்து அரசு பணியில் சேரவே 30 முதல் 32 வயதாக கூடிய நிலையில் இந்த அளவிற்கான ஊதியத்தை பெறும்போது தமிழக அரசு மருத்துவர்கள் 50 வயதை கடந்து விடுகின்றனர்.
எனவே மத்திய அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதை போன்றே தமிழக அரசு மருத்துவர்களுக்கும் ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.