‘பிகில்’ திரையிட தாமதமானதால் ஆத்திரம்..! வன்முறையில் இறங்கிய ‘தளபதி’ ரசிகர்கள்!!

கிருஷ்ணகிரியில், பிகில் திரைப்படம் வெளியிட தாமதமானதால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள் அதிகாலை நேரத்தில், கற்களை வீசியும், விளம்பர பேனர்களை அடித்து உடைத்தும் வன்முறையில் இறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.

 

பெரும் சர்ச்சைகளில் சிக்கிய விஜய்யின் பிகில் திரைப்படம் இன்று வெளியானது.விஜய், நயன்தாரா நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவான பிகில் திரைப்படம் தீபாவளி ரிலீசாக இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதிகாலை முதல் சிறப்புக் காட்சிகளாக திரையிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு, டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. ஆனால் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடையாது என்று தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ திடீரென முட்டுக்கட்டை போட்டதால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இதன் பின்னர் சில நிபந்தனைகளுடன், கடைசி நேரத்தில் சிறப்புக் காட்சிக்கு நேற்று இரவு அனுமதி கிடைத்தது. இதனால் மீண்டும் உற்சாகமடைந்த விஜய் ரசிகர்கள் , இன்று அதிகாலையிலேயே பிகில் படத்தின் முதல் காட்சியை பார்த்தே தீர வேண்டும் என்ற வெறியில் இரவு முதல் தியேட்டர்களின் வாசல்களில் காத்திருந்தனர்.

 

தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை 4.30 மணிக்கு பிகில் படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்ட நிலையில், கிருஷ்ணகிரி ரவுண்டானா அருகில் உள்ள ஒரு தியேட்டரில் படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனால் வெறித்தனமாக கூச்சலிட்ட விஜய் ரசிகர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர். சாலையில் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்தும், அருகில் இருந்த கடைகளின் பேனர்களை கிழித்தும் , சரமாரியாக கற்களை வீசியும் ரகளையில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியே போர்க்களம் போல் காட்சியளித்தது.உடனடியாக அப்பகுதிக்கு விரைந்த அதிரடிப்படை போலீசார் விஜய் ரசிகர்களை துரத்தியடித்தனர். அதிகாலை நேரத்தில் விஜய் ரசிகர்கள் வன்முறை ரகளையில் ஈடுபட்ட சம்பவம் கிருஷ்ணகிரியில் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.


Leave a Reply