வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக வடகிழக்கு பருவமழை-2019 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
சார்பாக வடகிழக்கு பருவமழை-2019 முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (ம) தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கூடுதல் தலைமைச் செயலாளர் வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர். கே.சத்யகோபால், மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் ஆகியோர் முன்னிலையில், நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை (ம) தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் அவர்கள் கூறியதாவது : தமிழகத்தில் மாறி வருகின்ற பருவமாற்றத்திற்கேற்ப பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசால் சிறப்பாக எடுக்கப்பட்டு வருகிறது. நமது இராமநாதபுரம் மாவட்டத்தில் அக்டோபர் நவம்பர் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்கள் நமக்கு வடகிழக்கு பருவமழைக் காலமாகும். இந்த காலங்களில் நமக்கு கிடைக்கக்கூடிய மழையின் அளவில் 48 சதவிகிதம் மட்டுமே குடிநீருக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இராமநாதபுரத்தில் மழையின் அளவு சராசரியை விட குறைந்து காணப்படுகிறது. எனவே பற்றாக்குறை மழைப்பொழிவை நாம் எதிர்த்து போராடி வறட்சியை சமாளித்து மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது.

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஏற்கனவே பல்வேறு இடங்களில் ஏற்பட்ட பேரிடர்களின் போது சிறப்பாக பணியாற்றியவர். அரசு பேரிடர் மேலாண்மை என்பது மழை வெள்ளம் புயல் பாதிப்புகளுக்கு நிவாரணம் மட்டுமே வழங்கக்கூடிய நிலையிலிருந்து தொழில்நுட்ப வளர்ச்சியினால்; பல்வேறு உபகரணங்கள் மற்றும் வழிமுறைகள் மூலம் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பிவைத்த சுற்றறிக்கையின்படி பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் துரிதமாக அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

3 நிலைகளில் முன்னேற்பாடுகள் பணிகளானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி பேரிடர் காலத்திற்கு முன் பேரிடரின் போது பேரிடர் காலத்திற்கு பின் அனைத்து துறைகளின் வாயிலாக நிவாரண மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஒவ்வொரு மாட்டங்களிலும் நான்கு நிலைகளில் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிய மிகப் பாதிப்பு மிதமான பாதிப்பு மற்றும் பாதிப்பு குறைந்த பகுதிகள் என பிரித்து அலுவலர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கும் மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு குழுக்கள் அமைத்து குழுக்கள் மூலம் உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து அதனை ஒரு வரைபடத்தினை தயாரித்து அதன் மூலம் பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.

 

அனுபவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் புது புது யுத்திகள் மக்களின் நல்வாழ்விற்கு பயன்படக் கூடியதாக அமைக்கப்பட்டு வருகிறது. கஜா புயலின் பாதிப்பின்போது கடலோர மாவட்டங்களான நாகப்பட்டினம் திருவாரூர் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை தடுப்பு செய்திகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட போது அதனை பொதுமக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 32 மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டதின் பெயரில் அனைத்து முன்னேற்பாடுகளுடன் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருந்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் இடம் மாற்றம் செய்யப்பட்டு தங்க வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் பொதுக்கள் அதனை மறுத்து விட்டனர். பின்னர் முதலமைச்சரின் கவனத்திற்க கொண்டு செல்லப்பட்டு காவல் துறையினர் உதவியுடன் பொதுமக்கள் நிவாரண முகாம்களுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டனர்.

பொதுமக்கள் இரவோடு இரவாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட காரணத்தினால் ஒரு மனித உயிரிழப்புக் கூட ஏற்படவில்லை. இது பொதுமக்களுக்கு முழுமையான விழிப்புணர்ச்சி ஏற்படாமல் இருப்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். வானிலை எச்சரிக்கையினை நாம் அனைவரும் கவனத்தில்
கொள்ள வேண்டும். மேலும் பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வினை அரசு அலுவலர்கள் உரிய வழிமுறையாக ஏற்படுத்த அனைத்து விதத்திலும் தயார் நிலையில் இருக்க வேண்டும். சில காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகும்போது வலுவிழக்கவும் செய்யும் வலுப்பெறவும் செய்யும். அவ்வாறு வலுப்பெறும் பட்சத்தில் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். முழுமையான பேரிடர் தடுப்பு என்பது ஒரு உயிரிழப்பு கூட இல்லாமல் இருப்பதே உண்மையான பேரிடர் தடுப்பு மேலாண்மையாக இருக்கும். இழப்பு ஏற்பட்டப்பின் நிவாரணம் வழங்குவது மட்டுமல்லாமல் இழப்பே இல்லாமல் இருப்பது தான் உண்மையான பேரிடர் மேலாண்மையாகும்.

 

அனைத்து பகுதிகளிலும் முதல் நிலை பொறுப்பாளர்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் சிறப்பாக தயார் நிலையில் பயிற்சிகள் வழங்கப்பட்டு களப்பணிகளை ஆற்றுவதற்கு உள்ளனர் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு சீருடைகளும் வழங்கப்பட்டு அவர்களுக்கு முன்னுரிமைகள் வழங்கப்படுவது சிறப்பாக உள்ளது. அனைத்து முதல்நிலை அரசு அலுவலர்கள் முதல் வட்டாட்சியர்கள் துணை வட்டாட்சியர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் என அனைவரும் தங்கள் பணிகளை களத்தில் மேற்கொள்வதற்கு அனைத்து விதத்திலும் தங்களை தயார் நிலையிலும் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலர்கள் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை இழந்து வாடும் தருவாயில் அவர்களை சமாதான அடையச் செய்து அவர்களுக்கு இணக்கமாக ஆறுதல் கூறி மனிதாபமானம் அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.கருணாஸ் (திருவாடானை)என்.சதன்பிரபாகர் (பரமக்குடி) எஸ்.சரவணன் (மதுரை தெற்கு)இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் வக்பு வாரியத் தலைவர் அ.அன்வர்ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.


Leave a Reply