கோவை சித்தாபுதூர் பகுதியில் தனவர்ஷா டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. சுரேஷ் என்பவர் இந்த நிறுவனத்தை நடத்தி வந்தார். இந்த நிறுவனம் சுற்றுலா திட்டங்கள் மூலம் சீரடி, கோவா, மும்பை,அந்தமான் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும், சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற பல வெளிநாடுகளுக்கும் செல்வதற்காக சலுகை கட்டணங்களை அறிவித்தது. குறிப்பாக பயணத்திற்கு சில மாதம் முன்னதாகவே டிக்கெட் புக் செய்தால் அவர்களுக்கு சலுகைகள் கொடுக்கப்படும் என தெரிவித்து இருந்தது.
இதனையடுத்து ஏராளமானோர் உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக டிக்கெட் புக் செய்திருந்தனர். நேற்று வரை இயங்கி வந்த அந்த நிறுவனம் இன்று காலை திடீரென மூடப்பட்டது. இந்நிலையில் தங்களது பயணச்சீட்டுகள் வாங்குவது தொடர்பாக அந்த அலுவலகத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் நிறுவனம் மூடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
ஒவ்வொருவரும் சில ஆயிரங்கள் முதல் பல லட்சம் ரூபாய் வரை பணம் கட்டியிருந்த நிலையில் தங்களுக்கு டிக்கெட் கிடைக்குமா ? பயணத்தைத் தொடர முடியுமா ? என தெரியாமல் தவித்தனர். இந்நிலையில் இந்த தகவல் அறிந்த ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இந்நிலையில் டிராவல்ஸ் அலுவலகம் வந்த காவல்துறையினர் திங்கட்கிழமை காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் படி கூறி டிராவல்ஸ் அலுவலகம் முன்பு இருந்த அவர்களை கலைத்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரில் வந்து தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்து புகார் அளித்தனர்.
நிறுவனத்தை மூடிவிட்டு உரிமையாளர் தலைமறைவாகி விட்ட நிலையில் சுமார் 3 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக பணம் கட்டி ஏமாந்த சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர். இது குறித்து மாநகர குற்றப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.