ஒரு கட்சியில் சேர்ந்த வேட்பாளர் வேறு ஒரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கொங்கு மக்கள் தேசிய கட்சி, ஐஜேகே ஆகிய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
திமுக கூட்டணியில் போட்டியிட்டு வென்ற 4 எம்பிக்களின் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி தேசிய மக்கள் கட்சி தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்சியில் இருந்து விலகாமல் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவது சட்டவிரோதமானது என மனுதாரர் கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் சேசாயி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவரை அந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிட அனுமதி அளித்தது தேர்தல் நடைமுறைகளில் மோசடி செய்வது ஆகாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் தேர்தல் கட்சியின் பெயர் தேர்தல் அறிக்கையை விட சின்னமே பெரும்பங்காற்றுகிறது என்றும் சின்னத்தை வைத்துதான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தேர்தலில் வெற்றி தோல்வியை விட நேர்மையாக போட்டியிடுவது தான் முக்கியம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதற்கு பதில் அளித்துள்ள தேர்தல் ஆணையம் ஒரு கட்சியைச் சேர்ந்த ஒருவர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தெரிவித்தது., எனினும் தேர்தல் அதிகாரி வேட்பு மனுவை ஏற்றுக் கொண்டால் அதை எதிர்த்து தேர்தல் வழக்கு தொடர முடியும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.