அலுமினியப் பாத்திரம் உற்பத்தி தொழிலில் தற்போது உள்ள ஜிஎஸ்டி வரியை குறைக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என அலுமினிய பாத்திர உற்பத்தியாளர்கள் சங்க கூட்டமைப்பின் மூத்த உறுப்பினரும், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கோவையில் தெரிவித்துள்ளார்.
வீடுகள் மற்றும் ஓட்டல்களில், சமையலுக்கு பயன்படுத்தக் கூடிய பாத்திரங்களில், அலுமினிய பாத்திரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில், சென்னை,சேலம், கோவை மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில், அலுமினிய பாத்திரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில் அனைத்திந்திய அலுமினிய பாத்திரம் பதிவாளர்கள் சங்க கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டம் கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் அரங்கில் நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து 150 க்கும் மேற்பட்ட அலுமினிய பாத்திர உற்பத்தியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் அலுமினிய பாத்திர தயாரிப்பில் தற்போது உள்ள நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் தொழிலை மேம்படுத்துவதற்கு உண்டான பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இந்த கூட்டமைப்பின் மூத்த உறுப்பினரும், தமிழக சட்டமன்ற துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சமீப காலமாக, மூலப்பொருள் விலையேற்றம், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவற்றால் அலுமினிய பாத்திர உற்பத்தி தொழிலில் சிறிது சுணக்கம் ஏற்பட்டுள்ளதாகவும்,குறிப்பாக அலுமினிய பாத்திர உற்பத்தி தொழிலில் தற்போது உள்ள ஜி.எஸ்.டி வரியை குறைக்க கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்துள்ளதாகவும்,இது குறித்து மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்தார்.






