தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவா் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:

 

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். கேரளா மாநில ஆளுநராக இருந்த சதாசிவம் மாற்றப்பட்டு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

 

இதேபோல், ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார். இமாசலப்பிரதேசம் மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:-

 

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து அதிலிருந்து உழைப்பைத் தவிர வேறு எதுவும் கட்சிக்கு செய்ததில்லை. கடுமையாக ஒரு அடிப்படை உறுப்பினராக இருந்து மாநில தலைவராக உயர்ந்து என்று ஒரு ஆளுநராக என்னை அமர்த்தி இருக்கிறார்கள் என்றால் அது உண்மையிலேயே நான் செய்த மிகப்பெரிய பாக்கியம்.

 

தமிழக மக்களுக்கு நான் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு சகோதரியாக வளர்ந்து அவர்களில் ஒருகட்சித் தலைவியாக மிளிர்ந்து ஆளுநராக செல்கிறேன் தமிழக மக்களுக்கும் எனது வாழ்நாள் சேவை இருக்கும். அதே மாதிரி என்னை ஆளுநராக எந்த மாநிலத்திற்கு அனுப்பியிருக்கிறார்கள் அந்த மாநிலத்திற்கு எந்தெந்த வகையில் எல்லாம் எனது சேவையை பணியைச் செய்ய முடியுமோ அதை நான் செய்வேன்.

இது ஒரே நாடு என்ற ஒரு உணர்வோடு எல்லோரிடமும் எளிமையாக பழகக் கூடிய ஒரு தன்மையை நான் எந்த உயரத்திற்கு சென்றாலும் விட்டுவிடக் கூடாது என்பதை நான் எனது வாழ்நாளில் ஒரு கடமையாக வைத்திருக்கிறேன்.

 

அதேபோல மருத்துவராக உயர்ந்தபோது சரி, ஒரு அரசியல்வாதியா உயர்ந்த போதும் சரி, கட்சித் தலைவராக உயர்ந்த போதும் சரி, இன்று ஒரு மாநிலத்தின் ஆளுநராக உயர்ந்த போதும் எப்போதும் எல்லோரும் சகோதரியாகவும் எல்லோராலும் அணுகக்கூடிய அன்பு உடையவளாகவும், எல்லோருக்கும் இயன்ற உதவியை செய்யக்கூடிய வகையில் தான் எனது வாழ்க்கை இருக்கும் என்பதையும் நான் இங்கே பதிவு செய்கிறேன் .

 

நான் தெலுங்கானாவுக்கு தான் ஆளுநர். ஆனால் தமிழகத்திற்கு உங்கள் சகோதரி, தம்பிகளுக்கு அக்கா, அண்ணன்களுக்கு தங்கச்சி, சகோதரி என்பதைத்தான் நான் இங்கே பதிவு செய்கிறேன்.

 

காங்கிரஸ் குடும்பத்திலிருந்து ஒரு பிரபலமான ஒரு தூய்மையான அரசியல் வாதியா இருந்த காலகட்டத்தில், ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு உயர் கல்வியை படித்து முடித்த ஒரு மாணவி என்ற வகையில், பாரதிய ஜனதா கட்சியை தேர்ந்தெடுத்து முற்றிலுமாக ஒரு காங்கிரஸ் குடும்பத்தின் காங்கிரஸ் தலைவரின் மகளாக வளர்ந்து, அதிலிருந்து விடுபட்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக் கொண்டு அதில் எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காகவே மிக உறுதியாக இருந்து தான் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய சவால் என்றார்.


Leave a Reply