கோவை மாவட்டத்தில் புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், காரமடை, சூலூர், அன்னூர், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கணுவாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.இதனால் தொழிலாளர்கள் பலர் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் கோவை மாவட்ட எஸ்.பி யாக பொறுப்பேற்ற சுஜித் குமார் கள்ள லாட்டரி ஒழிப்பிற்கென தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தடாலடியாக கைது செய்தார்.
சமீபத்தில் கூட புறநகர் பகுதியான அன்னூரில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்த எஸ்.பி யின் தனிப்படையினர் அவர்களிடமிருந்து சுமார் ஒரு கோடி மதிப்பிலான லாட்டரி சீட்டுக்கள்,ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் விற்பனைக்காக பயன்படுத்தி வந்த நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.எஸ்.பி யின் இந்த அதிரடி நடவடிக்கையால் மிரண்டு போன லாட்டரி வியாபாரிகள் அண்டை மாவட்டங்களுக்கு சென்று தஞ்சமடைந்து விட்டதாக தகவல்கள் தெரிய வந்துள்ளன.
இந்த நிலையில் குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்தும் கனிம வளக்கொள்ளையினை தடுக்கும் பொருட்டு கோவை மாவட்டத்தில் முதன்முறையாக ” மணல் திருட்டுக்கென தனிப்படை “யினை அமைத்துள்ளார் எஸ்.பி.
மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திக்கேயன் மற்றும் கோவை எஸ்.பி சுஜித் குமார் உத்தரவின் படி மணல் கடத்தலை தடுக்கும் பொருட்டு தனி வாகனம் ( anti sand smuggling patrol ) புதிதாக துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.இந்த வாகனம்,தொண்டாமுத்தூர்,ஆலாந்துறை,காருண்யா நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஒரு எஸ்.ஐ , 5 காவலர்கள் தலைமையில் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தீவிர ரோந்து பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
பொது மக்களும் மணல் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்கும் பொருட்டு தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.மேலும்,மணல் திருட்டில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்படுவார்கள் என காவல் துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே எஸ்.பி யின் தலைமையில் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளர் லோகநாதன் அவர்களின் கீழ் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் பிரிவில் கோவை மாவட்டத்தில் பதிவான செல்போன் மிஸ்ஸிங் வழக்குகளில் நடப்பாண்டில் மட்டும் 400 செல்போன்கள் கண்டறியப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.