மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்த மாணவர்களுக்கு கிடைத்த ஹைகோர்ட் கொடுத்த தண்டனை

மது அருந்திவிட்டு வகுப்பறைக்கு வந்த மாணவர்கள் விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தை சுதந்திர தினத்தன்று காலை முதல் மாலை வரை சுத்தம் செய்ய வேண்டும், மது விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பிரச்சாரம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நூதன உத்தரவு பிறப்பித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கலை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 8 பேர் போதையில் வகுப்புக்கும், கம்ப்யூட்டர் ஆய்வகத்துக்கும் வந்ததாக புகார் எழுந்தது.

 

இதனால் அந்த குறிப்பிட்ட மாணவர்களை கல்லூரி நிர்வாகம் 3-ம் ஆண்டில் அனுமதிக்கவில்லை. இதையடுத்து 8 மாணவர்களும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தங்களை கல்லூரியில் சேர்க்க உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தனர்.மன்னிக்க முடியாத குற்றம் தவறை உணர்ந்துள்ளனர்.

 

இந்த மனு நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மாணவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அதே நேரத்தில் 3-ம் ஆண்டிலிருந்து மனுதாரர்களை வெளியே அனுப்பினால் அவர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். மாணவர்களும் தவறை உணர்ந்துள்ளனர்.

 

நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கல்லூரியில் ஒழுங்காக இருப்பதாக உறுதியளித்துள்ளனர். இதனால் மனுதாரர்கள் சுதந்திரதினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி விருதுநகரில் காமராஜர் பிறந்த இடத்தில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும். காமராஜர் இல்லத்துக்கு வரும் பார்வையாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். மாலை 4 முதல் 6 மணி வரை தமிழில் மது விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட பதாதைகளை ஏந்தி நினைவிடத்துக்கு வெளியே பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுபடி மனுதாரர்கள் நடந்து கொள்கிறார்களா என்பதை கல்லூரி முதல்வர் உதவிப் பேராசிரியர் ஒருவரை நியமித்து கண்காணிக்க வேண்டும். உதவிப் பேராசிரியர் மனுதாரர்களின் செயல்பாடு குறித்து கல்லூரி முதல்வரிடம் மறுநாள் அறிக்கை அளிக்க வேண்டும். அந்த அறிக்கையை பெற்றதும் மனுதாரர்களிடம் உரிய கல்விக் கட்டணத்தை பெற்றுக்கொண்டு 3-ம் ஆண்டு வகுப்பில் கல்லூரி முதல்வர் அனுமதிக்க வேண்டும்.

 

மனுதாரர்களின் செயல்பாட்டை விருதுநகர் டவுன் காவல் ஆய்வாளரும் கண்காணித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற தவறினால் மனுதாரர்கள் மீது கல்லூரி ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவை செயல்படுத்த கல்லூரி நிர்வாகத்துக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக மனுதாரர்கள், கல்லூரி முதல்வர் ஆகஸ்ட் 19-ல் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.


Leave a Reply